கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் இன்னும் முடியாத நிலையில் விழுப்புரத்தில் சாராய புழக்கம் அதிகரித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் மாவட்டங்களை இணைக்கின்ற வகையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சாராய பாக்கெட்டுடன் போதை ஆசாமி அலப்பறையில் ஈடுப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஏற்கனவே போதையில் இருக்கும் அந்த நபர், மேலும் ஒரு சாராய பக்கெட்டுடன் பட்டப்பகலில் பேருந்து நிலையத்திற்குள் பயணிகளுக்கு மத்தியில் அமர்ந்து நிதானமாக தண்ணீர் பாட்டிலில் கலந்து குடிக்கின்றார்.
இதன் மூலம் விழுப்புரம் நகரத்தில் சாராய விற்பனை படுஜோராக நடைப்பெற்று வருவது உண்மையாகியுள்ளது.
கடந்த 3 தினங்களுக்கு முன்பு சாராய வேட்டை நடத்துவதாக கூறி 60க்கும் மேற்ப்பட்ட காவல்துறையினர் விழுப்புரம் நகரம் மற்றும் பெரிய காலனி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருவெண்ணெய் நல்லூரில் பாக்கெட் சாராயம் குடித்து முதியவர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் விழுப்புரத்தில் சாராய விற்பனை இன்னும் தடுக்கப்படவில்லை என்பதற்கான சான்றாக இச்சம்பவம் நடந்துள்ளது.
இது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படும் என பேசிய நிலையில், விழுப்புரத்தில் சாராய விற்பனை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன், விழுப்புரம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“