விழுப்புரத்தில் ரூ. 6 கோடி மதிப்புள்ள யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட 4 யானை சிலைகளை விற்க முயன்றது தொடர்பாக 12 பேரை வனத்துறையினர் வியாழக்கிழமை (நவம்பர் 14) கைது செய்துள்ளனர்.
திருச்சியிலிருந்து ஒரு கும்பல் பழங்காலத்து யானை தந்தத்தால் செய்யப்பட்ட கலைநயமிக்க சிலைகளை விற்பனை செய்ய உள்ளதாக சென்னை வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பேரில் விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் தலைமையில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு தனியார் லாட்ஜில், வனத்துறையினர் போலீசாருடன் சென்று அந்த கும்பலை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து யானை தந்தத்தில் செய்யப்பட்ட ஆறரை கிலோ எடையுள்ள 4 யானை சிலைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், பிடிபட்ட கும்பலிடம் விசாரணை நடத்தினர். மேலும், அவர்களிடமிருந்து சொகுசு கார்கள், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட 4 சிலைகளின் மதிப்பு சுமார் ரூ. 6 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையில், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஈஸ்வரி, கருப்பசாமி, முகமது ஜியாதீன், ஜஸ்டின், கார்த்திகேயன் ஆகியோர் விற்பனைக்காக யானைத் தந்தத்தால் ஆன 4 யானை சிலைகளைக் கொண்டு வந்தது தெரியவந்தது. மேலும், யானை தந்தத்தால் செய்யப்பட்ட அந்த சிலைகளை பாலமுருகன், பிரபாகரன், சுப்பிரமணி, பைசர், பார்த்தசாரதி, ராஜா, ராஜகுமார் ஆகியோர் வாங்க வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, யானை தந்தத்தால் செய்யப்பட்ட சிலைகளை விற்கவும் வாங்கவும் வந்த 12 பேரையும் வனத்துறை போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர். உண்மையில் இது யானை தந்தத்தால் செய்யப்பட்டதா என விசாரணை நடத்தினர். மேலும், இந்த கடத்தலில் இன்னும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என கைது செய்யப்பட்டவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil