விழுப்புரத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த மாணவி, தந்தை திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த 19 வயது இந்து என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட பெண் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். இதற்காக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி) சான்றிதழுக்கு விண்ணப்பிக்க மாணவியின் தந்தை ஒரு அரசு மையத்திற்குச் சென்றிருந்தார். அப்போது விண்ணப்ப செயல்முறையின் ஒரு பகுதியாக ஓ.டி.பி.,க்காக (OTP) மாணவியை தொலைபேசியில் அழைத்தபோது, மாணவி இரண்டு முறை தவறான ஓ.டி.பி.,யை தந்தையிடம் கூறியுள்ளார்.
பின்னர், சரியான ஓ.டி.பி.யுடன் மாணவியின் தந்தை ஓ.பி.சி சான்றிதழ் விண்ணப்பத்தை பதிவு செய்தார். ஆனால் வீடு திரும்பியதும் மாணவியைத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துக் கொண்டார். முன்னதாக, நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்ற பயத்தில் மாணவி உயிரை மாய்த்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், போலீசார் அதனை மறுத்துள்ளனர்.
அறிக்கைகளின்படி, மாணவி தனது கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பை முடித்தார். புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் நீட் பயிற்சி பெற்று கடந்த ஆண்டு தேர்வெழுதியிருந்தார். மாணவி கடந்த 350 மதிப்பெண்கள் எடுத்ததால் மருத்துவ சீட்டை பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அவரது குடும்பத்தினருக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.