தர்பூசணியில் நிறத்திற்காகவும், சுவைக்காகவும் ரசாயனங்கள் கலக்கப்படுவதாக பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என விழுப்புரம் தோட்டக்கலை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை அதிகாரிகள் வானூர், ரங்கநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் தர்பூசணி தோட்டங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தர்பூசணி உற்பத்தி குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விழுப்புரம் மாவட்டத்தில் 3500 ஹெக்டர் நிலப்பரப்பில் தர்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. வானூர் வட்டார பகுதியில் சுமார் 300 ஹெக்டேரில் தர்பூசணி பயிரிடப்பட்டு இரண்டாவது அறுவடை நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவில் தர்பூசணி சாகுபடி செய்யும் பகுதியாக திண்டிவனம், மரக்காணம், வானூர், மயிலம், விக்கிரவாண்டி, முகையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
விவசாயிகள் நிறத்திற்காகவும், சுவைக்காகவும் ஒரு சில ரசாயனங்களை பயன்படுத்தி ஊசியின் மூலம் தர்பூசணில் செலுத்துவதாக தற்போது நிலவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி. இதனை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்தார்.