Villupuram Melpathi Draupadi Amman temple - Film director V. Gowthaman
க.சண்முகவடிவேல்
Advertisment
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பழமையான அருள்மிகு தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. மேல்பாதி ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 2016-ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 2022- ஆம் ஆண்டு தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் தர்மர் பட்டாபிஷேகமும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிலையில் தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியல் சமூக மக்கள் வழிபாடு மேற்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, அந்தக் கோயிலுக்கு வருவாய்த் துறையினர் பூட்டி சீல் வைத்தனர். மேலும், வெளியூர் ஆட்கள் கிராமத்துக்குள் வர தடை விதிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாவலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இந்நிலையில், திரைப்பட இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளருமான கெளதமன் நேற்று மேல்பாதி கிராமத்துக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் பேசினார். இந்த தகவலறிந்த வளவனூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் அங்குச் சென்று கௌதமனை வெளியேற்றி, விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.பின்னர் எஸ்.பி. கோ.சஷாங்க்சாயை சந்தித்து மேல்பாதி பிரச்சினை குறித்து அவர் கேட்டறிந்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெளதமன், “மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் வழிபாடு மேற்கொள்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அரசியல் கட்சியினர் பெரிதுப்படுத்தியதன் காரணமாகவே இப்பிரச்சினையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சியினர் தங்களது இருப்பை உறுதி செய்து கொள்வதற்காகவே திட்டமிட்டு இதைத் தூண்டி விட்டுள்ளனர். கோயில் பிரச்சினை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் 7 முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தீர்வு காணப்படவில்லை. திரெளபதி அம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரமும் காட்டப்படவில்லை” என்றார்.
இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர், இந்தக்கோயிலை இந்து சமய அறநிலைத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வராததால் கிராம மக்களே கோவிலுக்கான பராமரிப்பு மற்றும் திருவிழாப் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil