கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்ற தமிழக மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், விழுப்புரம் தொகுதியில் தொடர்ந்து வி.சி.க முன்னணியில் இருந்து வருகிறது. ஆனாலும் அ.தி.மு.க தொடர்ந்து டஃப் கொடுத்து வருகிறது.
இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்றது. இதில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஜூன் 1-ந் தேதி நடைபெற்ற நிலையில், இன்று (ஜூன் 4) நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தில் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் இருந்து வருகிறது.
அதேபோல் கருத்துக்கணிப்பு முடிவுகளை பொய்யாக்கும் விதமாக இந்தியா முழுவதும் பாஜக சற்று பின்னடைவை சந்தித்து வருகிறது. குறிப்பாக பா.ஜ.க.வின் கோட்டை என்று அழைக்கப்படும் உத்திரபிரதேசத்தில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் கடந்த முறை ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற அ.தி.மு.க இந்த முறையயும் அனைத்து தொகுதிகளிலும் பின்னிலை சந்தித்துள்ளது.
இதில் பல இடங்களில் 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்துள்ள அ.தி.மு.க, விருதுநகர் தொகுதியில் கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். அதற்கு அடுத்து விழுப்புரம் தொகுதியில் மட்டுமே அதிமுக பெரிய டஃப் கொடுத்துள்ளது. இந்த தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் போட்டியிட்டார். அவருக்கு எதிராக அதிமுக சார்பில், பாக்யராஜ் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நேரத்தில் இருந்தே வி.சி.க வேட்பாளர் ரவிக்குமார் முன்னணியில் இருந்தாலும், அவருக்கு டஃப் கொடுக்கும் விதமாக அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் வாக்குகளை பெற்று வந்தார். இதில் முதல் சுற்று முடிவில், வி.சி.க 22951 வாக்குகள், அதிமுக 20930 வாக்குகள், பாமக 9040 வாக்குகள், நாம் தமிழர் 2619 வாக்குகள் பெற்றிருந்தது. இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 2021 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார்.
தொடர்ந்து 2 மற்றும் 3-வது சுற்றுகளில் ரவிக்குமார் தொடர்ந்து முன்னிலை பெற்றிருந்த நிலையில், நான்காம் சுற்று முடிவில் வி.சி.க: 89815, அ.தி.மு.க 76820, பா.ம.க, 36107 பெற்றிருந்த நிலையில், வி.சி.க வேட்பாளர் ரவிக்குமார் 12995 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். தொடர்ந்து மதியம் 1 மணி நிலவரப்படி, ரவிக்குமார் 35018 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கையில், இறுதி சுற்று முடிவில் வி.சி.க ரவிக்குமார் 477033 வாக்குகள் பெற்று 70703 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அதிமுக பாக்யராஜ் 406330 வாக்குகள், பாமக சார்பில் முரளி சங்கர் 181882 நாதக சார்பில் களஞ்சியம் 57242 வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்றனர்.
அதேபோல் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்து வந்தாலும், அதன்பிறகு அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது முன்னிலை பெற்றார். தற்போது அவர், அதிமுக வேட்பாளர் சந்திரஹாசனை விட. 29972 வாக்குகள் முன்னிலையில் இருந்தார்.
தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை பெற்ற திருமாவளவன், 505084 வாக்குகள் பெற்று, 103554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் சந்திரஹாசன், 401530 வாக்குகளும், பாஜகவின் கார்த்தியாயினி 168493 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்து இடங்களை பெற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.