/indian-express-tamil/media/media_files/2025/09/24/villupuram-police-arrest-10-people-for-fraud-involving-offering-household-appliances-at-low-prices-tamil-news-2025-09-24-22-16-25.jpg)
குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி போலியான பொருட்களை கொடுத்து ஏமாற்றிய 10 பேரை விழுப்புரம் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செட்டிக்குப்பம் முத்தாலம்மன் கோவில் தெருவில் வசிக்கும் கோவிந்தன் என்பவரின் மனைவி தாட்சாயிணி. இவர் தனக்கு ஏற்பட்ட மோசடி தொடர்பாக மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், செட்டிக்குப்பம் முத்தாலம்மன் கோவில் தெருவில் வசிக்கும் தனது தோழியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கேஸ் ஸ்டவ் வாங்கிக் கொள்ளும் படி கேட்டுள்ளனர். மேலும் அதிரடி ஆஃபர் கூப்பன் ஒன்றை கொடுத்து, இதை சுரண்டினால் அதில் உள்ள மதிப்பிற்கு கேஸ் ஸ்டவ் மற்றும் இதர பொருட்கள் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்கள்.
இதையடுத்து, அந்த சுரண்டல் அட்டையை தேய்த்ததில் அவர்களுக்கு வெள்ளி கொலுசு பரிசாக கிடைத்துள்ளது. இதை அடுத்து வெள்ளி கொலுசுக்கு அவர்கள் ரூ. 6,700 கொடுத்துள்ளனர். அந்த வெள்ளி கொலுசை தாங்கள் நகை கடையில் சென்று கொடுத்து அதனை சரிபார்த்தபோது அது போலியான கொலுசு எனத் தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உமாதேவி, காவல் ஆய்வாளர் பரணிநாதன் மற்றும் காவலர்கள் தலைமையில், இரு சக்கர வாகனம் பல்வேறு சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததுள்ளனர். அப்போது, கோட்டகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய முதலியார் சாவடி கெஸ்ட் ஹவுஸ் அருகே நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை அடையாளம் கண்டு கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்று சோதனை செய்துள்ளனர்.
அங்கு தென்காசி, சேலம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பத்து நபர்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். மணிகண்டன், உதயசூரியன், சண்முக நகுலன், உதயகுமார், முத்துக்குமார், கோபி, மோகன்ராஜ், தினேஷ், முத்து மாரியப்பன், வனராஜா ஆகிய 10 பேரையும் போலீசார் விசாரணை செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வீட்டு உபயோகப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக கூறிக்கொண்டு, இரு சக்கர வாகனங்களில் தெரு தெருவாக சென்று குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் சுரண்டல் அட்டையை பயன்படுத்தி அதில் உள்ள விலையை மட்டும் கொடுத்தால் போதும் என்று ஆசை வார்த்தை கூறி பொதுமக்களை ஏமாற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஒரு கார், 15 வெள்ளி மூலம் பூசப்பட்ட கொலுசு, நான்கு மிக்சி, இரண்டு கேஸ் ஸ்டவ், 9 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.