/indian-express-tamil/media/media_files/2025/06/14/mzzcu7fYjwWBDxSKRdQO.jpeg)
Villupuram
விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டியார்மில் மற்றும் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட M.G ரோடு, மாம்பழப்பட்டு ரோடு ஆகிய பகுதிகளில் ஜூன் 12, 2025 அன்று இரவு ஏடிஎம் இயந்திரங்களில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பணம் வரும் பகுதியில் அலுமினிய தகடு வைத்து இந்த கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இச்சம்பவம் விழுப்புரம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் அவர்கள் உடனடியாக கொள்ளையர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில், விழுப்புரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா மேற்பார்வையில், நகர ஆய்வாளர் சித்ரா, காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் லியோசார்லஸ் மற்றும் காவலர்கள் அடங்கிய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையினர் உடனடியாக களத்தில் இறங்கினர். கொள்ளை நடந்த இடங்களை நேரில் பார்வையிட்டு, அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். தீவிர விசாரணையில், கொள்ளையர்கள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் பெங்களூருக்கு தப்பிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
தகவல் கிடைத்தவுடன் சற்றும் தாமதிக்காமல், தனிப்படையினர் பெங்களூரு விரைந்தனர். 24 மணி நேரத்திற்குள், துரித நடவடிக்கையால் கொள்ளையர்களைக் கைது செய்து, விழுப்புரம் அழைத்து வந்தனர். காவல்துறையின் இந்த மின்னல் வேக செயல்பாடு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
கொள்ளையர்களை விரைந்து கைது செய்து, மக்களின் பணத்தைக் காப்பாற்றியதற்காக, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் அவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.