ஃபீஞ்சல் புயலின் தாக்கம் சென்னையை விட விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களில் கடுமையாக இருந்ததாக கூறப்படும் நிலையில், சென்னைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை மற்ற மாவட்டங்களுக்கு அரசு வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வங்கக்கடலில் உருவாகியிருந்த ஃபீஞ்சல் புயல் நேற்று நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது. புயலின் தாக்கத்தால் சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை விடாமல் பெய்தது.
குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் மிக அதிக மழை அளவாக 50 செ.மீ மயிலத்தில் பதிவாகி உள்ளது.
இந்நிலையில், சென்னையின் பெரும்பாலான இடங்களில் தேங்கியிருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டதாகவும், மின்தடை ஏற்பட்ட இடங்களில் மீண்டும் மின் விநியோகம் நடைபெற்றதாகவும் சமூக வலைதளங்களில் மக்கள் கூறி வருகின்றனர்.
எனினும், சென்னைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மற்ற மாவட்டங்களுக்கு வழங்கப்படவில்லை என இணையவாசிகள் கூறுகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல், பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள வெள்ளநீர் வெளியேற்றப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“