பாபு ராஜேந்திரன் - விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து 4-வது நாளாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கன மழை பெய்தது. விழுப்புரம் நகரில் கடும் இடி, மின்னலுடன் இடைவிடாமல் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 22 செமீ மழையளவு பதிவாகியுள்ளது. இதேபோல் செஞ்சியில் 14 செ.மீட்டரும், திண்டிவனத்தில் 13 செ.மீட்டரும், மரக்காணத்தில் 11 செமீட்டரும், முகையூரில் 10.5 செ.மீ, கெடாரில் 9 செ.மீ, சூரப்பட்டில் 8.5 செ.மீ, கோலியனூரில் 7 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
இந்த கன மழையின் காரணமாக விழுப்புரம் நகரமே மழைநீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் முழுவதுமாக மழைநீரால் நிரம்பி ஏரியை போல் காட்சியளிக்கிறது. இதனால் பேருந்து நிலையத்திற்குள் தட்டு தடுமாறி நீரில் நீந்தியபடி பேருந்துகள் செல்கிறது.
ஏரியை போல் தண்ணீர் நிற்பதால் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாமல் பயணிகள், பேருந்து நிலையத்திற்கு வெளியே சாலையில் நின்றபடி பேருந்துகளில் ஏறி செல்கின்றனர். இது தவிர விழுப்புரம் நகருக்குட்பட்ட கெளதம் நகர், காந்தி நகர், கட்டபொம்மன் நகர், சுதாகர் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த பகுதிகளில் 2 அடிக்கும் மேலாக தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“