குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி, இந்த திட்டத்தை வெகு விமர்சையாக தர்மபுரி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் முகாம்கள் நடைபெற வேண்டும் என்றும் அமைச்சர்கள் அதை மேற்பார்வையிட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி இருந்தார்.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் வழங்கும் முகாமை பார்வையிட சென்றார். அப்போது, விண்ணப்பம் வாங்க வந்த மூதாட்டி ஒருவரிடம், 'எந்த ஊருமா நீ' என்று கேட்க, அதற்கு அந்த மூதாட்டியோ 'முத்தியால் பேட்டை' என்று சொல்கிறார். 'இங்கதான் வரணுமா' என்று அருகில் இருப்பவரிடம் விசாரித்த பின், 'என்ன வேலை செய்ற, நீங்க எதுக்கு வந்திருக்கீங்க' என்று கேட்டார் பொன்முடி.
அதற்கு அந்த பெண் தலையசைக்க, 'ஆயிரம் ரூபாய் கொடுக்கப்போறங்க அதற்கு பார்ம் தறாங்க' என்று ஒரு பெண் சொன்னார். 'சொல்லுங்க தெரியுதுல்ல, யார் கொடுக்கறாங்க தெரியுமா?' என்று மீண்டும் அந்த மூதாட்டியிடம் பொன்முடி கேட்டார். அந்த பெண் பதில் சொல்லலாமல் அமைதியாக இருக்க, விண்ணப்பத்தை நிரம்பும் பெண்ணோ, 'முதல்வர் ஸ்டாலின்னு சொல்லுங்க' என்று சொல்லிக் கொடுத்தார்.
அதைச்கேட்டு அந்த மூதாட்டி 'இல்ல… இல்ல… நான் எப்பவுமே இரட்டை இலைதான்' என்று கூற இதைக்கேட்ட அமைச்சர் பொன்முடி தூக்கி வாரிப்போட்டது. அதன்பிறகு ஆச்சரியத்தோடு சிரித்துக்கொண்டே அந்த பெண் ஏதோ சொல்ல முற்பட, 'போதும் போதும்' என்று கூறினார். தொடர்ந்து பேசிய பொன்முடி, 'அப்ப எல்லாருக்கும் நாம கொடுக்கறோம், இரட்டை இலைக்கும் கொடுக்கறோம் என்றும் சொல்லி விட்டு ரைட் ரைட்' என்று கூறினார்.
அதன் பிறகு முகாமில் கூடியிருந்த பெண்களைப் பார்த்து ஆயிரம் ரூபாய் வருவது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி என்று சொன்னார். 'விலைவாசி ஏறினாலும் தக்காளி கிலோ 100 ரூபாய் விற்றாலும் 1000 ரூபாய் வருதுல்ல, அது மகிழ்ச்சியா இல்லையா' என்று சொல்லிக்கொண்டே போகும் போது ஒரு பெண் ஏதோ கேட்க, 'போய் அதை மோடியிடம் கேளுங்க' என்று சொன்னார். பின்னர், 'அதையும்தான் ரேசன் கடையில் 60 ரூபாய்க்கு கொடுக்கறாங்க' என்று கூறினார். தொடர்ந்து அவர் 'ஆயிரம் ரூபாய் வரும் எல்லாம் மகிழ்ச்சியா இருங்க' என்றும் கூறினார்.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.