ஓர் ஆசிரியர் பள்ளியில் படிக்கும் 80 ஆயிரம் மாணவ மாணவிகளின் கல்வித் தரம் கேள்விக்குறியாக உள்ளது என விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷூக்கு கடிதம் எழுதியுள்ளார்.
விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்து இருப்பதாவது;
2023-24 ஆம் ஆண்டுக்கான UDISE+ அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. ஒப்பீட்டளவில் பள்ளிக் கல்வியில் தமிழ்நாடு அரசுசிறந்து விளங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்கு, பள்ளிக் கல்வியில் தற்போது முதலிடம் வகிக்கும் கேரள மாநிலத்தைத் தமிழ்நாடு விஞ்ச வேண்டும். அதற்குப் பின்வரும் நடவடிக்கைகளைத் தாங்கள் மேற்கொள்ள வேண்டும்.
ஓராசிரியர் பள்ளிகளே இல்லாமல் ஆக்க வேண்டும்:
தமிழ்நாட்டில் ஒரு ஆசிரியர் மட்டுமே இருக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை 2758 உள்ளது. அந்தப் பள்ளிகளில் 80,586 மாணவர்கள் படிக்கின்றனர் எனத் தெரியவந்துள்ளது. ஓர் ஆசிரியர் மட்டுமே ஒரு பள்ளியை நிர்வகிப்பது கல்வித் தரத்தைக் கடுமையாகப் பாதிக்கும். அந்தப் பள்ளிகளில் படிக்கும் 80,586 மாணவர்களின் கல்வித் தரம் என்னவாக இருக்கும். இந்தப் பள்ளிகளை உடனடியாகக் குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகளாக ஆக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஆசிரியர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்:
தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் ஆசிரியர் - மாணவர் விகிதம் 24 ஆக இருக்கிறது. தேசிய சராசரியான 25க்கு இது குறைவு என்றாலும் பல மாநிலங்களை ஒப்பிடும்போது இது அதிகமாக இருக்கிறது. அது மட்டுமின்றி சராசரியாக ஒரு பள்ளிக்கு 9 ஆசிரியர்கள் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளனர். அந்த எண்ணிக்கை பல மாநிலங்களில் 20க்கும் அதிகமாக உள்ளது. அதுபோலவே சராசரியாக மாணவர் சேர்க்கை ஒரு பள்ளிக்கு 221 எனத் தமிழ்நாட்டில் உள்ளது. அதுவும் பல மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது. ஒரு மாணவர் கூட சேராத பள்ளிகள் 496 உள்ளன. அந்தப் பள்ளிகளில் 889 ஆசிரியர்கள் பணிபுரிவதாகத் தெரியவந்துள்ளது. இந்த கவலைக்குரிய நிலை மாற்றப்பட வேண்டும்.
இடைநிற்றலை இல்லாதாக்க வேண்டும்:
தமிழ்நாட்டில் தற்போது ஆரம்பக் கல்வியிலும், இடைநிலைக் கல்வியிலும் இடைநிற்றல் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால், உயர்நிலைப் படிப்பில் இடைநிற்றல் 5.45% ஆக உள்ளது. தேசிய சராசரியைவிட இது குறைவு தான் என்றாலும், அருகாமையில் உள்ள கேரள மாநிலத்தில் உயர்நிலைப் படிப்பில் இடைநிற்றல் 2.18% ஆக மட்டுமே உள்ளது.
எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் எட்டாம் வகுப்பில் அதிக எண்ணிக்கையில் படிப்பை நிறுத்துகின்றனர். உயர்நிலைப் படிப்பில் (9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை) எஸ்.சி மாணவர்களின் மொத்த சேர்க்கைவிகிதம் (GER) 90.3. அதில் ஆண்கள் 86.5, பெண்கள் 94.3. அதே உயர்நிலை வகுப்புகளில் எஸ்.டி மாணவர்களின் சேர்க்கை விகிதம் (GER) 89.1 ஆக உள்ளது. எஸ்.சி, எஸ்.டி மாணவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்துகின்றனர். அவர்களில் ஆண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
இடைநிற்றலுக்கும் குழந்தைத் தொழிலாளருக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. பள்ளிக் கல்வியில் இடைநிற்றலைத் தடுக்காமல் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியாது. இந்த உண்மையைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் இடைநிற்றல் முற்றிலும் இல்லாத நிலையைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
பள்ளி நூலகங்களில் புத்தகங்களின் எண்ணிக்கையை உயர்த்துக:
இந்திய மாநிலங்களில் மிகப் பெரிய நூலகங்களை உருவாக்கி சாதனை படைத்திருப்பவர் நம்முடைய முதலமைச்சர் ஆவார். ஆனால் பள்ளிகளில் உள்ள நூலகங்கள் ஒப்பீட்டளவில் புறக்கணிக்கப்பட்டவையாக உள்ளன. தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 406 புத்தகங்கள் நூலகங்களில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கை அருகாமையில் உள்ள கேரளாவில் 2,783 ஆகவும், டெல்லியில் 5,958 ஆகவும் உள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 99.94% பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளில் 95.79% பள்ளிகளிலும் நூலகங்கள் உள்ளன என இந்தஅறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் அந்த நூலகங்களை மாணவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை என்பதை எனது நேரடி ஆய்வுகளில் கண்டேன். இந்தநிலை மாற்றப்பட வேண்டும். அத்துடன் பள்ளி நூலகங்களில் நூல்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும். சென்னை புத்தகக் காட்சி நடைபெறும் இந்தநேரத்தில் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.