/indian-express-tamil/media/media_files/2025/08/18/villupuram-vikravandi-1000-and-2000-year-old-sculpture-and-pottery-discovered-tamil-news-2025-08-18-16-47-56.jpg)
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தொரவியில் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தட்சிணாமூர்த்தி சிற்பம், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான மண்பாண்ட ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன் ஆகியோர், விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவி கிராமத்தில் களஆய்வில் ஈடுபட்டனர். அப்போது கேணீஸ்வரர் கோவில் வளாகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தட்சிணாமூர்த்தி சிற்பமும், பொறையாத்தம்மன் கோவில் அருகே உள்ள விளைநிலங்களில் கருப்பும், சிவப்பும் கலந்த பழமையான மண்பாண்ட ஓடுகள், கருப்பு வண்ணத்தில் சுடுமண்ணால் செய்யப்பட்ட கைப்பிடி கண்டெடுக்கப்பட்டது. இவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தொல்லியலாளர் துளசிராமன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி வரலாற்றுஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:-
தொரவி கிராம விளைநிலம் பகுதியில் அமைந்துள்ள கேணீஸ்வரர் கோவிலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தட்சிணா மூர்த்தி சிற்பம் கண்ட றியப்பட்டது. இது 10-ம் நூற்றாண்டை சேர்ந்தது. ஆலமரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரது காது, கை, கால்களில் அணிகலன் அணிந்தும், 4 கரங்களில் பின் கையில் தாமரை மொட்டு ஏந்தியும், வலதுகரம் அபய முத்திரையுடனும், இடதுகரம் சின் முத்திரையுடனும் காட்சியளிக்கிறார்.
வலது காலை மடக்கி, தொடை மீது வைத்து இடதுகாலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். காலுக்கு கீழே முயலகன் உள்ளார். இது சோழர் காலத்து கலைபாணிக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. இந்த சிற்பம் கி.பி., 10-ம்நுாற்றாண்டை சேர்ந்தது என மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால் உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே தொரவியில் பல்லவர் கால விநாயகர், முருகன், சோழர்கால கொற்றவை சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது முதுநிலை வருவாய் ஆய்வாளர் சந்திரவள்ளி, கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தன், உதவியாளர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - விழுப்புரம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.