விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் ஹெல்மெட் போடாமல் சென்றதற்காக போலிஸார் மறித்ததால் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்துள்ள காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவரது மனைவி அய்யம்மாள். இவர்களது மகன் செந்தில்.
செந்தில், மேலாகுறிச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு தாயார் அய்யம்மாளுடன் சென்றுள்ளார். அப்போது, செந்தில் குடிபோதையில் இருந்தது மட்டுமல்லாது, ஹெல்மெட் இல்லாமலும் வாகனத்தை இயக்கியுள்ளார். அப்போது கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிக்கொண்டிருந்தனர். போலீஸ் சோதனையிலிருந்து தப்பிக்க, செந்தில், தனது இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளார். கான்ஸ்டபிள் சந்தோஷ், வாகனத்தின் பின்பகுதியை இழுக்க முற்பட்டபோது, வாகனம் நிலைகுலைந்து தடுமாறியது.
இதில், பின்னால் அமர்ந்திருந்த தாய் அய்யம்மாள் தவறி விழுந்துள்ளார். விழுந்த வேகத்தில் அய்யம்மாள் தலையில் அடிபட்டு மயக்கம் அடைந்தார், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அய்யம்மாளை மீட்டு அருகில் உள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அய்யம்மாளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக கூறினர். செந்திலுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அய்யம்மாளின் மரணத்துக்கு கான்ஸ்டபிள் சந்தோஷ் தான் காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள், மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆயுதப்படைக்கு மாற்றம் : வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், எஸ்எஸ்ஐ மணி, தலைமை காவலர்கள் சந்தோஷ், செல்வம், இளையராஜா ஆகியோரை விழுப்புரம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி ஜெயக்குமார் அதிரடி உத்தரவிட்டார்.
பணியிடை நீக்கம் : கள்ளக்குறிச்சி வாகன சோதனையில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி சந்தோஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.