விழுப்புரம் மாவட்டம் அனச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (28). பழங்குடி இருளர் சமூகத்தினைச் சேர்ந்தவரான இவர், விழுப்புரம் டி.வி.எஸ் மகாலட்சுமி குழுமத்தின் இரண்டு சக்கர வாகன சேவை மையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த திங்கள்கிழமை அவர் வாட்டர் சர்வீஸ் செய்த போது மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தார்.
இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். அவரது மனைவி கங்கா (22) கொடுத்த புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இதனிடையே, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கன்னியப்பன் உடலின் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இருப்பினும், அவரது உடல் இன்னும் அடக்கம் செய்யாமல் உள்ளது. இந்த நிகழ்வை முன்னிட்டு விழுப்புரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் அதிகாரம், திராவிடர் கழகம், பழங்குடியினர் விடுதலை இயக்கம், மக்கள் கல்வி இயக்கம் மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் ஆகியவை கலந்து கொண்டன.
இந்தக் கூட்டத்தில், 'பணியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த கன்னியப்பன் குடும்பத்திற்கு தமிழக அரசு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் உடனடியாக வழங்க வேண்டும். அவரது மனைவி இந்து அவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தொழிலாளர் இழப்பீடு சட்டத்தின் கீழ், டிவிஎஸ் மகாலட்சுமி குழும நிர்வாகம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகையினை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியை நடத்தும் மகாலட்சுமி குழுமத்தின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தொழிற்சாலைகளையும், சேவை மையங்களையும் ஆய்வு செய்து தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்து தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி விரிவான பிரச்சாரம் நடத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விரைவாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தி: பாபு ராஜேந்திரன்.