விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் 45. இவரது மனைவி உமா42. இவர்களுக்கு கல்லுாரியில் படித்து வரும் மனோ (23) என்ற மகனும், வினோதினி (21) என்ற மகளும் உள்ளனர்.
கணவன்–மனைவி இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இடங்களில் செங்கல் சூளைகளில் கல் அறுக்கும் தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் உமா சூளையில் வேலை செய்யும் இடங்களில் ஆண்களிடம் சகஜமாக நெருங்கி பழகி வந்துள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மணிகண்டன், தகாத உறவை கைவிடுமாறு கண்டித்துள்ளார். இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.
சமீப காலமாக கணவன்–மனைவி இருவரும் விக்கிரவாண்டி அருகே உள்ள தொரவி கிராமத்தில் சூளையில் வேலை செய்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் 14 ஆம் தேதி காலை வழக்கம்போல் இருவரும் தொரவிக்கு வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பியுள்ளனர்.இரவு 8:30 மணிக்கு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது மணிகண்டன், மனைவி உமா ஆண்களிடம் வைத்துள்ள தகாத உறவு குறித்து தரக்குறைவாக பேசி மனைவியை அடித்து, உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அக்கம், பக்கம் உள்ளவர்கள் கணவன், மனைவி இருவரையும் சமாதானம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இரவு 10:00 மணிக்கு உமா மற்றும் மகன், மகள் ஆகிய மூவரும் சாப்பிட்டு முடித்து தூங்கியுள்ளனர். மனைவியின் நடத்தையால் ஏற்பட்ட மன உளைச்சலால் துாங்காமல் கண் விழித்திருந்த மணிகண்டன், இரவு 11:00 மணிக்கு வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லால் தாக்கியள்ளார். இதில் மண்டை உடைந்த உமா படுக்கையிலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில், இரவு 11:30 மணிக்கு மணிகண்டன் கண்டமஙகலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அப்போது, 'மனைவியை அம்மிக் கல்லைப்போட்டு கொலை செய்விட்டேன்' என போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, உமாவின் உடலை மீட்டுள்ளனர்.
இதன்பின்னர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கணவன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விக்கிரவாண்டி டி.எஸ்.பி., நந்தகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் தலையில் அம்மிக்கல்லைப்போட்டு கொலை செய்த சமபவம் கண்டமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - விழுப்புரம்.