சென்னையில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய 4 கடற்கரைப் பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
கடற்கரைகளை அடைவதற்காக காவல்துறை சார்பில் பிரத்யேகமாக 17 வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் கொண்டாடப்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு திவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது.
சென்னை பெருநகர காவல் துறைக்கு உள்பட்ட பகுதிகளில் 1,343 விநாயகா் சிலைகளும், தாம்பரம் மாநகர காவல் துறைக்கு உள்பட்ட பகுதியில் 693 விநாயகா் சிலைகளும் பொது இடங்களில் வைக்க அனுமதி வழங்கப்பட்டன.
பதற்றமான பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு, துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிலைகள் இருக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமரா மூலமாவும் காவல் துறை கண்காணிக்கிறது.
வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இந்த விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்துக்குட்பட்ட சீனிவாசபுரம், பட்டிணப்பாக்கம், பல்கலைநகர், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்க காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக 17 வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிலைகளை கரைப்பதற்கு Conveyar Belt. கிரேன்கள், படகுகள் உதவி கொண்டு சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வில் 18,500 காவலர்கள் ஈடுபட உள்ளனர். காவல் துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர், பொது அமைதிக்கு இடையூறாக இருப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“