விநாயகர் சதுர்த்தி: சிலைகளை வைப்பதற்கான விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை வைப்பதற்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 10ம் தேதிக்குள் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை வைப்பதற்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 10ம் தேதிக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், அவற்றை கரைப்பதற்கும் 24 நிபந்தனைகளை விதித்து கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து விநாயகர் சதுர்த்தி மத்திய மண்டல குழு அறங்காவலரும், இந்து முன்னணி தலைவருமான ராமகோபாலன், இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ஒற்றை சாளர முறையில் விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவெடுப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதி ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். அதில், ‘இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவதற்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்படும் என்று அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார். எனவே, 8ம் தேதி மாலை 4 மணிக்குள் (இன்று) விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாக மாநகரங்களை பொறுத்தவரை காவல் உதவி ஆணையரையும், மாவட்டங்களை பொறுத்தவரை துணை கண்காணிப்பாளரையும் அணுகி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை விழா அமைப்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த மனுக்களை வரும் 10ம் தேதி மாலை 5 மணிக்குள் பரிசீலித்து அந்தந்த அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும். உயர் நீதிமன்றம் ஏற்கனவே விதித்த வழிகாட்டுதல்களை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். விழாவை நடத்துபவர்களுக்கு நியாயமான மின் கட்டணத்தை மின்துறை அதிகாரிகள் நிர்ணயம் செய்ய வேண்டும். ஊர்வலத்திற்கான தேதி, நேரம் ஆகியவற்றை சம்பந்தப்பட் அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும். ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சிகள் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் அமைதியான முறையில் நடைபெற நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். வழக்கு 3 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close