/indian-express-tamil/media/media_files/2025/08/30/vinayagar-idol-immersion-trichy-2025-08-30-10-16-05.jpg)
காவிரி ஆற்றில் கரைந்த விநாயகர்கள்: திருச்சியில் விடிய விடிய நடந்த சிலை கரைப்பு ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருச்சி காவிரி ஆற்றில் விடிய விடிய கரைக்கப்பட்டன.
சிலைகளின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு
கடந்த புதன்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு விழா குழுக்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மொத்தம் 1,182 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் புறநகரில் 939 சிலைகளும், மாநகரில் 243 சிலைகளும் அடங்கும். இந்த சிலைகளுக்கு மூன்று நாட்களாக 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஊர்வலம் மற்றும் விசர்ஜன ஏற்பாடுகள்
நேற்று மாலை முதல், பல்வேறு பகுதிகளில் இருந்த விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் தாரை தப்பட்டைகள் முழங்க, வாணவேடிக்கைகள் மற்றும் பட்டாசுகளுடன் ஊர்வலமாக காவிரி ஆற்றுப் பாலத்திற்கு கொண்டு வரப்பட்டன. சிலைகள் கரைப்பதற்காக மாநகராட்சி சார்பில் காவிரி ஆற்றுப் பாலத்தின் ஒருபுறம் 7 பிரத்யேக மேடைகள், தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. பெரிய சிலைகள் கிரேன்கள் மூலம் ஆற்றில் இறக்கப்பட்டன. அசம்பாவிதங்களைத் தவிர்க்க, இந்த ஆண்டு காவல்துறையினரே நேரடியாக சிலைகளை வாங்கி விசர்ஜனம் செய்தனர்.
பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு
விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் விசர்ஜனத்தை ஒட்டி, மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் 1,500 போலீசார், தீயணைப்புப் படையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
காவிரி பாலம் முழுவதும் பொருத்தப்பட்டிருந்த 16 சிசிடிவி கேமராக்கள், ஒரு டூம் கேமரா மற்றும் சுழற் கேமராக்கள் மூலம் ஊர்வலம் கண்காணிக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் சிலைகளை கரைக்க வந்தவர்களுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஊர்வலம் காரணமாக காவிரி பாலத்தில் பிற்பகல் முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
மதுக்கடைகள் மூடல்
அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக, மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் உத்தரவின் பேரில், ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் இருந்த 50 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை திருச்சி மாநகர், புறநகர் மட்டுமின்றி பெரம்பலூர், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டதாக காவல் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.