Advertisment

சென்னையில் விநாயகர் ஊர்வலம்: இன்று எந்த ஏரியாக்களில் போக்குவரத்து மாற்றம்?

சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில் தாம்பரம் மற்றும் எண்ணூர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
chennai

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி செப்.18-ம் தேதி முதல் கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் வீடுகளில் சிலை வைத்து வழிபாடு செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பொது இடங்களிலும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது.  

Advertisment

இதையொட்டி இன்று (செப்.24) சென்னையில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது. இதனால் தாம்பரம், எண்ணூர், திருவேற்காடு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தாம்பரம் போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைக்கப்படுவது வழக்கம். அதற்காக வேளச்சேரி சாலையில் இன்று கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் 51, 51 A, V51, A51 ஆகிய மாநகர பஸ்கள், பள்ளிக்கரணை மேம்பாலத்தை பயன்படுத்தி செல்லும். மறு மார்க்கமாக அதே வழிதடத்தில் பஸ்கள் இயங்கும். தாம்பரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் 95, 99 மற்றும் 99A ஆகிய மாநகர பஸ்கள் அனைத்தும் செம்மொழி சாலையை பயன்படுத்தாமல் மாற்று வழியாக காமாட்சி ஆஸ்பத்திரி சந்திப்பை சென்றடைந்து 200 அடி ரேடியல் சாலை துரைப்பாக்கம் வழியாக செல்லும். 

மறு மார்க்கமாக அதே வழிதடத்தில் பஸ்கள் இயங்கும். மாம்பாக்கம் சாலை வழியாக வேளச்சேரி, தாம்பரம் மெயின் ரோடு செல்லும் 51 B மற்றும் 51v ஆகிய பஸ்கள் மாற்று வழியாக சித்தாலப்பாக்கம் சந்திப்பை அடைந்து, மாடம்பாக்கம் சிவன் கோவில், ராஜகீழ்பாக்கம் வழியாக சென்று வேளச்சேரி பிரதான சாலையை சென்றடையும். மறு மார்க்கமாக அதே வழிதடத்தில் பஸ்கள் இயங்கும். இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு உட்பட்ட அனைத்து போலீஸ் நிலைய எல்லைகளில் பல்வேறு இந்து அமைப்புகள், பொதுமக்கள், தனி நபர்கள் சார்பில் மொத்தம் 649 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன. இதில் கரைக்கப்பட்டது போக மீதமுள்ள 440 சிலைகள் நாளை கரைக்கப்படுகிறது. இந்த விநாயகர் சிலைகள் பின்வரும் குறிப்பிட்ட வழித்தடங்களில் சென்று குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கரைக்கப்பட அனுமதிக்கப்படுகின்றன.

அதன்படி திருநின்றவூர் சந்திப்பில் இருந்து பட்டாபிராம், ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு சென்று கரைக்க வேண்டும். திருவேற்காடு பகுதியில் இருந்து வேலப்பன்சாவடி, வானகரம், கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் ஆகிய பகுதிகளின் வழியாக சென்று பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்க வேண்டும். நசரத்பேட்டை பகுதியில் இருந்து பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், போரூர் சந்திப்பு, ஆற்காடு சாலை சென்று பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்க வேண்டும். 

மணலி மார்க்கெட் சந்திப்பில் இருந்து காமராஜர் சாலை, மஞ்சம்பாக்கம், மாதவரம் பஸ் நிலையம், மூலக்கடை, வியாசர்பாடி, மணலி எக்ஸ்பிரஸ் சாலை, எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை, திருவொற்றியூர் உயர் சாலை வழியாக பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு சென்று கரைக்க வேண்டும். சி.பி.சி.எல். நிறுவனம் எம்.எப்.எல். சந்திப்பில் இருந்து சத்யமூர்த்தி நகர், எண்ணூர் ஆகிய வழியாக சென்று எண்ணூர் கடற்கரையில் கரைக்க வேண்டும்.

மீஞ்சூர் ரெயில்வே கேட் பகுதியில் இருந்து அரியன்வயல், திருவாலவயல் காட்டூர், சதாமஞ்சி ஆகிய வழியாக பழவேற்காடு ஏரிக்கு சென்று கரைக்க வேண்டும். குமணன்சாவடி பகுதியிலிருந்து மாங்காடு, குன்றத்தூர், அனகாபுத்தூர், பல்லாவரம், மீனம்பாக்கம், தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை, வேளச்சேரி, எஸ்.ஆர்.பி. டூல்ஸ் வழியாக நீலாங்கரை கடற்கரைக்கு சென்று கரைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment