கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, விநாயக சதுர்த்தி விழாவின் பொது கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், பாஜக மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மற்ற வலதுசாரி அமைப்புகள் கடந்த சில நாட்களாக தடையை நீக்க போராடி வருகின்றன.
செவ்வாய்க்கிழமை, பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை அனுமதிக்கக் கோரியதற்கு சட்டசபையில் பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா பரவுவதைத் தடுக்க, செப்டம்பர் 30 வரை பெரிய கூட்டங்களைத் தடுப்பது உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியதாகக் கூறினார். விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 10 அன்று வருகிறது.
மேலும், ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகைகளின் போது மக்கள் கூடுவதற்கு கேரள அரசு அனுமதித்த பிறகு, நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில், நாம் வைரஸை முழுமையாக ஒழிக்கவில்லை. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு, விநாயகர் சதுர்த்தி உட்பட செப்டம்பர் 15 வரை அனைத்து பண்டிகைகளுக்கும் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுப்பாடுகள் பொது கொண்டாட்டங்களுக்கு மட்டுமே என்று அரசாங்கம் ஏற்கனவே கூறியுள்ளது. தனிநபர்கள் தங்கள் வீடுகளில் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விழாவைக் கொண்டாடலாம்,” என்றும் முதல்வர் கூறினார்.
முதல்வர் ஸ்டாலினின் பதில் பாஜக எம்எல்ஏவை மட்டுமல்ல, அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்திய மற்ற இந்துத்துவ அமைப்புகளையும் ஏமாற்றமடைய வைத்தது.
திங்கள்கிழமை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து மத விழாவுக்கு அனுமதி மறுக்கும் திமுக அரசின் முடிவை கேள்விக்குள்ளாக்கி, இது மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்களை திருப்திப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மேலும், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்கள் விநாயக சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? இந்த முடிவு மற்ற மதங்களைச் சேர்ந்த மக்களின் ஆதரவைப் பெறுவதற்கும் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதற்கும் உள்ளதா?” என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வீடுகளுக்கு முன்னால் ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக அண்ணாமலை கூறினார். கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் விநாயக சதுர்த்தி வாழ்த்து அட்டைகளை முதலமைச்சருக்கு அனுப்புமாறு அண்ணாமலை கேட்டுக் கொண்டார். மேலும் இந்து அல்லாத பண்டிகைகளுக்கு ஸ்டாலின் தனது முழு மனதுடன் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார் என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
திங்களன்று, இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர் பாபு, அண்ணாமலையை கடவுளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும், வீட்டில் பூஜைகள் செய்தாலே விநாயகர் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார் என்று குறிப்பிட்ட அமைச்சர், தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு ஊர்வலங்களை அனுமதிக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்ததாகவும், மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.
இதனிடையே சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டைப் போலவே, இம்முறையும் வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கரைக்கும் பொறுப்பை இந்து சமய அறநிலையத்துறை கவனித்துக்கொள்ளும் என்று கூறியுள்ளது.
விநாயகர் சதுர்த்திக்கான அரசு வழிகாட்டுதல்கள்
பொது இடங்களில் சிலைகள் நிறுவுதல் மற்றும் ஊர்வலங்களுக்கு அரசு அனுமதி மறுத்துள்ளது. மேலும் எந்த அமைப்பு மற்றும் இயக்கங்கள் சிலைகளை நீர்நிலைகளில் அமைப்புகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை. இருப்பினும், தனிநபர்கள் வழிபாட்டுத் தலங்களில் சிலைகளை வைக்க அனுமதி உண்டு.
மேலும், தனிநபர்கள் சிலைகளை எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி உண்டு. அதேநேரம், சென்னையில், குறிப்பாக சாந்தோம் மற்றும் நேப்பியர் பாலம் இடையே உள்ள கடற்கரையில், சிலைகளை கரைப்பதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.
பொதுமக்கள் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தி பண்டிகையைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தனிநபர்கள் மட்டுமே இந்த செயல்களைச் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.
இதேபோல், சென்னை பெசன்ட் நகர், மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கன்னி தேவாலயங்களில் செப்டம்பர் 8 -ம் தேதி அன்னை மேரியின் பிறந்த நாளைக் கொண்டாட அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகைகள் கொண்டாட அனுமதித்ததையடுத்து கேரளாவில் அதிகரித்த கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெரிசலைத் தடுப்பதற்காக, சென்னை மாநகர காவல்துறையினர் வருடாந்திர கார் ஊர்வலத்திற்கும் பொதுமக்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil