விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி விநாயகர் சிலைகளை வைப்பதற்கான விண்ணப்பங்களை ஒற்றை சாளர முறையில் பரிசீலிப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், அவற்றை கரைப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. விநாயகர் சிலைகள் வைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்புத்துறை, மின்சார வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் அனுமதியை பெற வேண்டும். சிலைகளை கரைக்க மாட்டு வண்டிகளில் வரக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் இதுபோன்ற அனைத்து அனுமதியையும் பெற்வது சாத்தியம் இல்லாததால் அரசாணையை ரத்து செய்ய கோரியும், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களில் தலையிட தடை விதிக்க கோரியும் விநாயகர் சதுர்த்தி மத்திய மண்டல குழு அறங்காவலரும், இந்து முன்னணி தலைவருமான ராமகோபாலன், இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, விநாயகர் சிலைகள் அமைக்க பல்வேறு துறைகளிடம் அனுமதி பெறுவதற்கு பதிலாக, யாராவது ஒரு அதிகாரியிடம் அனுமதி வாங்கும் வகையில் ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க முடியுமா என்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி ஒற்றை சாளர முறையில் விண்ணப்பங்களை பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும், அவ்வாறு வரும் விண்ணப்பங்களை மூன்று நாட்களில் பரிசீலித்து முடிவெடுப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு ஏதுவாக மாநகரங்களை பொறுத்தவரை காவல் துணை ஆணையரையும், மாவட்டங்களை பொறுத்தவரை துணை கண்காணிப்பாளரையும் அணுகி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவித்தார்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஒற்றை சாளர முறையில் விண்ணப்பங்களை பரிசீலிப்பதை ஏற்பதாகவும் அதேசமயம் மாவட்டங்களில் துணை கண்காணிப்பாளரை அணுக வேண்டுமென்றால் பிற பகுதிகளில் உள்ளவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால் அதை மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதேபோல 5 நாட்கள் மட்டுமே சிலை வைத்திருக்க வேண்டும், பட்டா இடத்தில்தான் சிலை வைக்க வேண்டும், சிலையில் உயரத்திற்கு கட்டுப்பாடு, மாட்டு வண்டியில் சிலைகளை எடுத்துச் செல்லக்கூடாது போன்ற விதிமுறைகள் கடுமையாக இருப்பதாகவும், அவற்றில் மாற்றம் கொண்டு வர வேண்டுமெனவும் தெரிவித்தனர்.
அனைத்தையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி ஆர்.மகாதேவன், சிலை வைக்கும் இடங்களுக்கு தேவையான மின்சாரத்தை அருகில் இருக்கும் வீடுகள், வணிக நிறுவனங்களின் ஒப்புதலுடன் எடுப்பதில் ஆட்சேபனை இல்லை என்றும், அதேசமயம் மின் தட கம்பிகளிலிருந்து திருட்டு மின்சாரம் எடுப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்ததுடன், மீறுபவர்கள் மீது காவல்துறை கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து வழக்கின் மீதான உத்தரவை நாளை பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.