scorecardresearch

வயலின் மேஸ்ட்ரோ டி.என்.கிருஷ்ணன் மரணம்

“விஷ் யூ எ மெர்ரி கிறிஸ்மஸ்” மற்றும் “ஜிங்கிள் பெல்ஸ், ஜிங்கிள் பெல்ஸ்” உள்ளிட்டவற்றைப் பல பார்வையாளர்கள் முன் இசைத்து தன் இசை நிகழ்ச்சியைத் தொடங்குவார்.

Violin Maestro TN Krishnan passed away in chennai musician tamil news
Violin Maestro TN Krishnan passed away

Violin Maestro TN Krishnan Passed away Tamil News: பிரபல வயலின் கலைஞர் டி.என்.கிருஷ்ணன் கடந்த திங்கள்கிழமை மாலை சென்னையில் மரணமடைந்தார்.

92 வயதான கிருஷ்ணனின் உடல்நிலை சீராக இருந்தபோதிலும், திங்கட்கிழமை மாலை திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டுக் காலமானார் எனச் சென்னையைச் சேர்ந்த இசை ஆர்வலரும் இசை நிகழ்வுகளின் அமைப்பாளருமான ராமநாதன் ஐயர் கூறினார். கிருஷ்ணனின் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த ராமநாதன், கடந்த மாதம்தான் அவருடைய பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடியதாக நினைவுகூர்ந்தார். “அவர் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். சமீபத்தில்கூட, அவருடைய ரசிகர்கள் மற்றும் சீடர்கள் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்” என்கிறார் ராமநாதன்.

1928-ம் ஆண்டு, கேரளாவின் திரிபுனிதுராவில் பிறந்த கிருஷ்ணன், சிறு வயதிலிருந்தே பல தலைமுறை கலைஞர்களுடன் தொடர்ந்து பணியாற்றினார். அரியகுடி ராமானுஜ ஐயங்கார், அலதூர் சகோதரர்கள், செம்பை வைத்தியநாத பாகவதர், எம்டி ராமநாதன், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோர் கிருஷ்ணன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

கிருஷ்ணன், 1942 முதல் சென்னையில் வசித்து வந்தார். “அவருடைய அனுபவத்துடன் பொருந்தக்கூடியவர்கள் யாரும் இங்கு இல்லை. 1940-களில் இருந்து ஒவ்வொரு இசைக் கலைஞர்களுடனும் பயணித்த அதிர்ஷ்டசாலி அவர்” என்று ராமநாதன் பூரிக்கிறார்.

சென்னையில் கர்னாடக இசை நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்லாமல், கிருஷ்ணனின் கட்டாய வருடாந்திர கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்காகவும் பலர் காத்திருப்பார்கள். அப்படிப்பட்ட இசை ஆர்வலர்களுக்கு, கிருஷ்ணனின் மறைவு மிகப்பெரிய இழப்பு. ஒவ்வொரு கிறிஸ்துமஸ் காலகட்டங்களிலும் பல ஆண்டுகளாகக் கிருஷ்ணனின் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்காகச் சென்னை மியூசிக் அகாடமியின் காலை ஸ்லாட் முன்னிருப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும். அங்கு அவர் “விஷ் யூ எ மெர்ரி கிறிஸ்மஸ்” மற்றும் “ஜிங்கிள் பெல்ஸ், ஜிங்கிள் பெல்ஸ்” உள்ளிட்டவற்றைப் பல பார்வையாளர்கள் முன் இசைத்து தன் இசை நிகழ்ச்சியைத் தொடங்குவார். கிருஷ்ணனின் மரணத்திற்குப் பிறகு, அவருடைய ரசிகர்கள் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியின் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சென்னை இசைக் கல்லூரியில் கற்பித்த அவர், பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் இசை மற்றும் நுண்கலை பள்ளியின் டீனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், ‘சங்கீத கலாநிதி’, ‘பத்ம பூஷண்’, ‘பத்ம விபூஷன்’ உள்ளிட்ட பல பட்டங்களையும் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

கிருஷ்ணனுக்கு மனைவி கமலா, மகள் விஜி, மகன் ஸ்ரீராம் ஆகியோர் உள்ளனர். அவருடைய வாரிசுகள் இருவரும் வயலின் கலைஞர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Violin maestro tn krishnan passed away in chennai musician tamil news