காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு நோய் கண்டறிதல், ஆலோசனை மற்றும் மருந்துச் சீட்டுகள் வழங்குவதற்காக மார்ச் 10 ஆம் தேதி, சென்னையில் 200 உட்பட குறைந்தது 1,000 காய்ச்சல் முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதிக எண்ணிக்கையில் பாதிப்புகள் பதிவாகும் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்படும். சென்னையில், 200 வார்டுகளில் உள்ள சமுதாய கூடங்கள் போன்ற பொது இடங்களில் முகாம்களை பெரு சென்னை மாநகராட்சி நடத்தும். ஒவ்வொரு முகாமிலும் ஒரு மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர் மற்றும் ஒரு உதவியாளர் இருப்பார் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
செப்டம்பர் 2022 இல் பரவிய பொதுவான பருவகால வைரஸ்கள் இன்னும் நீடித்து வருகின்றன, இதனால் கிளினிக்குகளில் நீண்ட வரிசைகளில் மக்கள் கூட்டம் நிரம்புகிறது, ரத்த பரிசோதனைகள் மற்றும் காய்ச்சல் மருந்துகளுக்கான அதிக தேவை உருவாகி உள்ளது.
இந்த முகாம்களை நடத்துவதன் நோக்கம், சிக்கல்கள் உள்ளவர்களுக்கு முன்கூட்டியே பரிந்துரைக்கப்படுவதை உறுதி செய்வதும், ஆன்டி பயாடிக்ஸ மற்றும் சுய மருந்துகளின் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதும் ஆகும், என்று பொது சுகாதார இயக்குனர் டாக்டர் டி எஸ் செல்வவிநாயகம் கூறினார். ஆன்டி பயாடிக்ஸ், சரியான முறையில் பயன்படுத்தாதபோது, அவை மருந்து எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும், என்றார்.
தேவையில்லாத போது ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டாம் என்று மருத்துவர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம், மருந்து சீட்டு இல்லாமல் அவற்றை விற்க வேண்டாம் என்று மருந்து கடைகளிடம் கேட்டுக்கொள்கிறோம். நோயாளிகள் மருந்துகளை சுயமாக எடுப்பதை தவிர்க்க வேண்டும். பெரும்பாலான வைரஸ் தொற்றுகள் தானாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன, மேலும் ஒரு வாரத்தில் மக்கள் குணமடைகிறார்கள், என்று அவர் கூறினார்.
பெரும்பாலான வகையான காய்ச்சல்கள் RSV, அடினோ மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் (H3N2) போன்ற வைரஸ்களால் ஏற்படுவதாக மாநில பொது சுகாதார ஆய்வகம் கண்டறிந்துள்ளது. சில நோயாளிகள் 10 நாட்கள் வரை நீடித்த இருமல் மற்றும் சோர்வு பற்றி புகார் செய்தனர், ஆனால் இறப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“