கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பால் தமிழகம் முழுவதும் பிரபலமான நாகர்கோவில் அருகே கீழக் கலுங்கடியைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி வயோதிகம் காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு பலரும் சமூக வலைதளங்களில் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
தமிழக அரசு கொரோனா நேரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 தவணையாக தலா 2 ஆயிரம் ரூபாயும், விலையில்லாப் பொருட்களும் வழங்கியது. நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி இந்தப் பரிசுத் தொகையை வாங்கிச் செல்லும்போது, முகம் நிறைய புன்னகையோடு சென்றார்.
இதைப் பார்த்த, நாகர்கோவிலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி, அந்தப் புன்னகையைப் படம் பிடித்தார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
அந்தப் புகைப்படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், ”இந்த சிரிப்பே நம் ஆட்சியின் சிறப்பு” என ட்வீட்டரில் பகிர்ந்திருந்தார்.
வேலம்மாள் பாட்டி தனது குடும்பத்தினராலேயே கைவிடப்பட்டு வீட்டுத் திண்ணையில் உண்டு, உறங்கி வாழ்ந்து வந்தார்.
அந்த புகைப்படம் கொடுத்த அடையாளத்தால், அரசு அதிகாரிகள் மட்டத்திலும் பாட்டியின் ஏழ்மைநிலை தெரியவந்தது. இது முதல்வரின் கவனத்துக்கும் தெரியவந்ததைத் தொடர்ந்து, வேலம்மாள் பாட்டிக்கு தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டம், பால்குளம் அருகில் குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடிக் குடியிருப்பில், பாட்டிக்கு வீடு ஒதுக்கப்பட்டது.
இவ்வீட்டிற்கான அரசு நிர்ணயித்த 76 ஆயிரம் ரூபாய் தொகையை கூட திமுக நிர்வாகி பூதலிங்கம் பிள்ளை தன் சொந்தப் பணத்தில் இருந்து கட்டினார்.
இந்த சம்பவங்கள் எல்லாம், குமரி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் 92 வயதான வேலம்மாள் பாட்டி வயோதிகம் காரணமாக மரணம் அடைந்தார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தி
பலரும் பாட்டியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“