/indian-express-tamil/media/media_files/2025/08/16/spicejet-flight-diversion-2025-08-16-11-35-17.jpg)
கோவையில் தரையிறங்கிய கொச்சி சென்ற துபாய் விமானம்: பயணிகள் கடும் அவதி; ஊழியர்களுடன் வாக்குவாதம்
மோசமான வானிலை காரணமாக துபாயில் இருந்து கொச்சி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் கோவையில் தரையிறங்கியதால், பயணிகள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி அவதிப்பட்டனர். இது தொடர்பாக விமான நிறுவன ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவியது. இதனால், கொச்சிக்கு வரவிருந்த பல விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 1:30 மணிக்கு புறப்பட்டு கொச்சிக்கு இரவு 7:30 மணிக்கு வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம், வானிலை காரணமாக கோவை விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.
விமானம் கோவைக்கு வந்தடைந்த பிறகு, பயணிகளை விமானத்திலேயே அமர வைத்ததாகவும், அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் வழங்கவில்லை என்றும் பயணிகள் குற்றம்சாட்டினர். துபாய் விமான நிலையத்திற்கு நேற்று காலை 9 மணிக்கு வந்ததாகவும், இரவு 12 மணி கடந்த பின்னரும் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்ததாகவும் கூறி பயணிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பயணிகளின் தொடர் வாக்குவாதத்திற்குப் பிறகு, நள்ளிரவு 2 மணியளவில் அவர்களுக்குப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, கோவையிலிருந்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து, பயணிகள் விமான ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்யும் செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி, விமான சேவை நிறுவனங்கள் இதுபோன்ற அவசர காலங்களில் பயணிகளைக் கவனித்துக் கொள்ளும் விதம் குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.