விருதுநகரில் கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரூ.5 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட அஞ்சலக உதவியாளரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து 4.58 கோடி ரூபாய் மீட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தலைமை தபால் அலுவலகத்தில் சூலக்கரையை சேர்ந்த அமர்நாத் (38) அஞ்சல உதவியாளராக( Postal Assistant) பணிபுரிந்து வந்தார்.
இவர் அருப்புக்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் அயற்பணியாக பணிபுரிந்த போது கணிணி தொழில்நுட்பத்தை முறைகேடாக பயன்படுத்தி அஞ்சலக பணம் ரூ.5,00,00,005 ஐ அவரது தனிநபர் வங்கி சேமிப்பு சணக்கிற்கு வரவு வைத்து முறைகேடு செய்துள்ளார்.
இதுகுறித்து கிடைத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட கணிணிவழி (சைபர் கிரைம்) குற்றப்பிரிவு போலிசார் கடந்த ஆண்டு மே 18 ஆம் தேதி வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அமர்நாத்தை கண்டுபிடிக்க விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.கண்ணன் உத்தரவின்பேரில், விருதுநகர் மாவட்ட கணிணிவழி குற்றப்பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் K.அசோகன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மீனா, சார்பு ஆய்வாளர் ,பாரதிராஜா, கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.
இந்நிலையில் அமர்நாத் என்பவர் சேதுராஜபுரம், பந்தல்குடி பைபாஸின் அருகாமையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் VSN Lodge அருகில் இருப்பதாக கிடைத்த Cyber space தகவலின்பேரில் தனிப்படை விரைந்து சென்று அங்கிருந்த எதிரி அமர்நாத்தை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அமர்நாத் விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். முறைகேடு செய்த பணம் ரூ.5,00,00,005ல் இதுவரையில் ரூ.4,58,90,068 மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட எஸ்பி கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.