விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் இன்று காலை ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு தயாரிப்பு பணியில் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இங்கு சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் பட்டாசு ஆலையில் உற்பத்தி தொடங்கியது. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்தனர்.
வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை கலவை செய்தபோது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அச்சங்குளத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 42), நடுச் சூரங்குடியை சேர்ந்த மாரிச்சாமி (வயது 44), வெம்பக்கோட்டை சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வக்குமார் (வயது 48), மோகன் (வயது 50) ஆகிய 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
வெடி விபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் சேதமடைந்தது.
இதையடுத்து தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளளனர். அத்துடன் பட்டாசு ஆலைக்குள் யாரும் சிக்கியுள்ளனரா என தேடி வருகின்றன.
பட்டாசு ஆலை விபத்து குறித்து சாத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தின் போது பணியில் எத்தனை தொழிலாளர்கள் இருந்தார்கள், வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“