Virudhunagar: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் விஜய் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக, திடீரென மருந்துகள் வெடித்து சிதறியுள்ளது.
இதில் 5 அறைகள் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இந்த வெடிவிபத்தில் அங்கு பணியில் இருந்த 5 பெண் தொழிலாளர்கள் மற்றும் 3 ஆண் தொழிலாளர்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, சம்பவம் அறிந்த சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்திவருகின்றனர்.
ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (பி ப்.17) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலே யே பலியாகினர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தே ன்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். இந்த விபத்தில் பலியானவர்களி ன் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“