/indian-express-tamil/media/media_files/2025/08/20/car-accident-2025-08-20-12-21-24.jpg)
விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறு நண்பர்கள் சென்ற கார் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதிய கோர விபத்தில், மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு விருத்தாசலம் அருகேயுள்ள எருமனூர் கிராமத்தில் திருவிழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு, அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (25), ஐயப்பன் (24), ஆதினேஷ் (23), வேலு (26), கௌதம் (24), மற்றும் நடராஜ் (25) ஆகிய ஆறு நண்பர்களும் நள்ளிரவு நேரத்தில் டீ குடிப்பதற்காக விருத்தாசலம் நகருக்கு ஷிஃப்ட் டிசையர் காரில் புறப்பட்டனர்.
அவர்கள் சேலம் புறவழிச் சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, மணவாளநல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் இருந்த ஒரு மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
விபத்தைக் கண்ட அப்பகுதி வாகன ஓட்டிகள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காரில் சிக்கியிருந்த இளைஞர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் ஐயப்பன் மற்றும் ஆதினேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வெங்கடேசன், வேலு, கௌதம் மற்றும் நடராஜ் ஆகிய நான்கு பேரும் உடனடியாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, வேலு, கௌதம், வெங்கடேசன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கும், நடராஜ் தஞ்சாவூர் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டனர். ஆனால், வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் எருமனூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இந்த விபத்து குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி:பாபு ராஜேந்திரன் கடலூர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.