சினிமாவில் யாராவது சமூக சீர்கேடான விஷயங்களை செய்தால், அதை தட்டிக் கேட்கிற இடத்தில் இருபெரும் சங்கப் பொறுப்புகளில் இருப்பவர் விஷால். ஆனால், ‘பஞ்சாயத்தே’ பாலிடால் பாட்டிலுடன் வந்தால் அது நியாயமா? டாக்டர் ராமதாஸ் என்ன சொல்கிறார்? என்பதை இங்கே பார்க்கலாம்.
நடிகர் விஷாலின் புதிய படமான "அயோக்யா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. கையில் ஒரு பீர் பாட்டிலுடன், வாகனத்தின் மீது ஸ்டைலாக விஷால் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் போஸ்டரில் இடம் பெற்றிருந்தன.
இதுதொடர்பாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "‘அயோக்யா’ திரைப்பட விளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்க பொதுச்செயலர் என்ற முறையில் புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன். இப்போது புகையை தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார். என்னவொரு சமூகப் பொறுப்பு!
பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச் செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்!" என பதிவிட்டுள்ளார்.
"சர்கார்" பட போஸ்டரின் போது, நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததற்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். படம் வெளியான பின்பு, காட்டமான அறிக்கையும் அவரிடமிருந்து வந்தது. "விஜய் செய்வது ஒரு விரல் புரட்சி அல்ல, இருவிரல் மோசடித்தனம்" என கடுமையாக சாடியிருந்தார். இப்போது, நடிகர் விஷால் ஒருபடி மேலே போய், கையில் பீர் பாட்டிலுடன் மருத்துவரின் பி.பி.யை எகிறச் செய்துள்ளார்.
தவிர, புகைப் பிடிக்கும் காட்சிகளை தவிர்க்க வலியுறுத்தி யாருக்கு பாமக கடிதம் எழுதியதோ, அதே நடிகரே பீர் பாட்டிலுடன் தோன்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.