விஷால் கடைசி முயற்சியாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை சந்தித்தார். தனக்கு முன்மொழிந்த இருவரை காணவில்லை என்பதை விளக்கினார்.
விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கால் பதிக்க களம் இறங்கியபோது இவ்வளவு முன்கூட்டியே சோதனைகள் வரும் என எதிர்பார்க்கவில்லை. அதாவது, தேர்தல் களத்தில் பெரிய கட்சிகளின் நெருக்கடி, மிரட்டல் ஆகியவற்றை எதிர்பார்த்தே இருந்தார்.
ஆனால் களம் புகும் முன்பே இப்படி முன்மொழிந்தவர்களை எதிர்தரப்பு கடத்திக்கொண்டு போகும் என்பதை அவர் கற்பனை செய்யவில்லை. ‘தம்பி இது ரத்த பூமி, இங்கெல்லாம் வரக்கூடாது’ என விஷாலை கலாய்த்து வருகிற மீம்ஸ்கள்தான், அரசியலின் நிஜமான கோர முகம் என்பது விஷாலுக்கே இப்போதுதான் புரிந்திருக்கும்.
ஆனாலும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக கடைசி நிமிடம் வரை, தனது வேட்புமனுவை ஏற்க வைக்க போராடினார் விஷால். நேற்று தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் கொடுத்தார் அவர். அதற்கு பதிலாக, ‘தொகுதி தேர்தல் அதிகாரி எடுப்பதுதான் இறுதி முடிவு. அவர்தான் அதில் முடிவெடுக்க வேண்டியவர்’ என விஷாலுக்கு சொல்லப்பட்டது.
இதற்கிடையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு 5 நிமிடங்கள் முன்பு, பல்டியடித்த இருவரும் வந்து தாங்கள் விஷாலுக்காக கையெழுத்திட்டது உண்மைதான் என சொன்னால் மறுபடியும் வேட்புமனு ஏற்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்தே விஷாலுக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் இன்று மேற்படி சுமதி, தீபன் ஆகிய இருவரையும் விஷால் தேடிச் சென்றார்.
ஆனால் அவர்களின் உறவினர்களோ, ‘நாங்களே அவர்களை தேடிக் கொண்டிருக்கிறோம்’ என்றார்கள். அதை பதிவு செய்துகொண்ட விஷால், ‘எனக்கு முன்மொழிந்த இருவரை காணவில்லை’ என இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதே புகாருடன் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை சந்திக்க பிற்பகல் 2.45 மணிக்கு வந்தார்.
அதாவது, வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று மாலை 3 மணிதான் கடைசி! அந்த இறுதி அவகாசம் முடிவதற்கு கால் மணி நேரம் முன்புவரை தனது போராட்டத்தை விஷால் தொடர்ந்தார். தனது புகார் மனுவை அதிகாரி வேலுசாமியிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் கெஞ்சலாக வேண்டுகோள் வைத்தபடி இருந்தார் விஷால். ஆனால் அந்த இறுதி நிமிடம் வரை அதிகார சக்கரம், இவர் திசையில் சுழல்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை.