விஷாலுக்கு இன்று நடந்தது, நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருக்கிறார்.
விஷால் வேட்புமனு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிராகரிக்கப்பட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் விடுத்த அறிக்கை:
விஷால் வேட்புமனு விஷயத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி விதிமுறைகளுக்கு முரணாக நடந்துகொண்டிருப்பது தேர்தல் ஆணையத்தின்மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை மீண்டும் ரத்துசெய்வதற்கு சதி நடக்கிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளது. எனவே ஆர்கே நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியை உடனடியாக மாற்றவேண்டும். அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்த இருவர் அதற்கான மனுவில் இருப்பது தங்களது கையொப்பம் அல்ல என்று கூறியதன் அடிப்படையில் வேட்பு மனுவை நிராகரித்ததாக முதலில் கூறப்பட்டது. அவர்கள் மிரட்டப்பட்டதாகக் கூறி அதற்கு ஆதாரமாக ஒரு ஆடியோ டேப்பை விஷால் வெளியிட்டார். மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்.
விஷால் வேட்புமனு பின்னர் ஏற்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் இப்போதோ அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். இவை யாவும் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையைக் சீர்குலைப்பதாக உள்ளன. எனவே உடனடியாக இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் தலையிடவேண்டும், ஆர்கே நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியை மாற்றி வேறு ஒருவரை நியமிக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 36 (2) (c) ல் வேட்பாளரின் கையொப்பமோ அவரை முன்மொழிந்தவரின் கையொப்பமோ போலியாக இருந்தால் வேட்பு மனுவை நிராகரிக்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது என்ற போதிலும் நிராகரிப்பதற்கு முன் அது போலி என்பதை சட்டரீதியாக அவர் உறுதிப்படுத்தவேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியின் முடிவை வேட்பாளரிடம் கூறி அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் வேட்பாளர் தனது தரப்பை நிரூபிக்க ஒருநாள் அவகாசம் தரவேண்டும் என அதே சட்டத்தின் பிரிவு 36 (5) ல் கூறப்பட்டுள்ளது. அப்படி எந்த வாய்ப்பும் தராமல் உடனடியாக முடிவை அறிவித்ததன்மூலம் அந்த சட்டப் பிரிவை தேர்தல் நடத்தும் அதிகாரி மீறியிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஒரு வேட்பாளருக்கு உதவுவதைத்தான் தேர்தல் நடத்தும் அதிகாரியின் கடமையாக தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறதே தவிர அவரது வேட்புமனுவை எப்படியெல்லாம் நிராகரிப்பது என்று பார்ப்பதை அல்ல. நடிகர் விஷாலின் வேட்பு மனுவை நிராகரிப்பதற்கு சொன்ன காரணத்தை நாளை எந்தவொரு வேட்பாளருக்கும் சொல்ல முடியும்.
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் எதிர்தரப்பு வேட்பாளரை யார் முன்மொழிகிறார்களோ அவர்களை மிரட்டி அவரது வேட்பு மனுவை நிராகரிக்கச்செய்துவிட முடியும். இது மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துவிடும். தேர்தல் முறையையே நாசமாக்கிவிடும்.
விஷால் மனு மீது முடிவெடுப்பதற்கு முன்னர் அவர் கூறியுள்ள புகாரைத் தேர்தல் ஆணையம் விசாரிக்கவேண்டும். யாராவது வேட்பாளரது தூண்டுதலின் மூலம்தான் விஷாலை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள் எனத் தெரிந்தால் அதற்குக் காரணமானவர் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை அப்பட்டமாக மீறியிருக்கும் தற்போதுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி ஆர்கே நகர் இடைத்தேர்தலை நேர்மையாக நடத்துவார் என்ற நம்பிக்கை இல்லை.எனவே அவரை மாற்றவேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறியிருக்கிறார்.