தஞ்சை மாவட்டத்தில் கோயில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய நபர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையில் பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், இஸ்லாமியர் ஒருவரை அறங்காவலராக நியமித்ததாக, விருதுநகர் மாவட்டம் சிவகாமிபுரம் தெருவைச் சேர்ந்த சரவணகார்த்தி என்பவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
தவறான தகவலை பரப்பி கலவரத்தை தூண்டும் வகையில் இந்த பதிவு இருந்ததாக, கடந்த 20-ஆம் தேதி அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக, இந்த விவகாரத்தில் ஈடுபட்ட நபரை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வதந்தி பரப்பிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்பாளராக பதவி வகித்து வரும் சரவணகார்த்தியை, தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். இந்த சூழலில், கோயில் அறங்காவலர் நியமனம் தொடர்பான உண்மையை, தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்பகம் அமைப்பினர், தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.