பார்வையற்ற மாணவர்களின் தொழில் நுட்ப மேம்பாட்டு திறன் குறித்த பயிற்சியை பெற்று கோவையில் முன்னணி நிறுவனங்களில் பார்வையற்ற மாணவ- மாணவிகள் ஆன்லைன் வேலைகளை செய்து அசத்தி வருகின்றனர்.
கல்வி என்பது அனைவருக்கும் ஒரு அடிப்படை உரிமையாகும். மேலும் பார்வையற்ற மாணவர்கள் கல்வி மற்றும் தனிப்பட்ட முறையில் செழிக்க உதவும் கற்றல் வளங்களை அணுகுவது மிகவும் முக்கியமானது.
அந்த வகையில் பார்வைக் குறைபாடுள்ள மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தி, அவர்களின் முழுத் திறனையும் அடைய உதவும் பல்வேறு பயனுள்ள கருவிகள், தொழில்நுட்பங்களை கோவை புரூக்பீல்ட்ஸ் நிறுவனம் சி.எஸ்.ஆர்.எனும் கார்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் ஹெல்ப் தி ப்ளைண்ட் பவுண்டேஷன் அமைப்புடன் இணைந்து பார்வையற்ற மாணவர்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
இந்த திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாணவர்களின் தொழில் நுட்ப மேம்பாட்டு திறன் குறித்த பயிற்சியை வழங்கி வருகின்றனர். இதில் பயிற்சி பெற்ற பார்வையற்ற மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் விதமாக கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் வளாகத்தில் கணினி மற்றும் மொபைல் செயலிகளை செயல்படுத்தி காட்டி அசத்தினர்.
அதே போல கணிணி மற்றும் ஆங்கில மொழி திறன் பயிற்சி காரணமாக பார்வையற்ற மாணவர்கள் பலர் முன்னனி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று வருவதாக பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். சக மனிதர்களைப் போல பார்வையற்றவர்களும் வேலைகளை செய்து காட்டி இருப்பது வியப்படைய செய்துள்ளது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“