சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக் தனது 59-வது வயதில் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மரணம் திரைதுறையினரிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. இன்று மரணமடந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு நடிகர் கமலஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கமலஹாசன்
நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்கு செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக் என்று கமலஹாசன் கூறியுள்ளார்.
மேலும், மேதகு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பு என்றும் தனது இரங்கலை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த்
'சின்னக் கலைவாணர்' விவேக் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. - நடிகர் ரஜினிகாந்த் என்று ரஜினி வருத்தம் தெரிவித்துள்ளார்.
சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத நாட்கள் என விவேக் உடனான நாட்களை நினைவு கூர்ந்துள்ளார்.
ரஜினியுடன் முதன்முதலாக ’உழைப்பாளி’ படத்தில் விவேக் நடித்தார். பின்பு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘சிவாஜி’ படத்தில் இணைந்து நடித்தார். சிவாஜி திரைப்படத்தில் ரஜினிக்கு தாய் மாமனாக விவேக் நடித்திருப்பார்.
விவேக் சிறுவயதிலே புத்தக வாசிப்பின் மீதும் கலைத்துறையின் மீதும் தீரா காதல் கொண்டிருந்தார். இதைதொடர்ந்து சென்னை வந்த அவர் நாடகங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். இவரை ’மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் செய்தார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.