ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அ.வியனரசு கைது செய்யப்பட்டார். அவரை போலீஸ் சிறையில் அடைத்தது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 13 பேர் பலியானார்கள். போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்ட பலரையும் போலீஸார் அடுத்தடுத்து கைது செய்து வருகிறார்கள்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்களில் ஈடுபாடு கொண்டவரான அ.வியனரசு, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்தவர்! சீமானை தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக வியனரசு செயல்பட்டு வருகிறார்.
நேற்று முன்தினம் (மே 30) அதிகாலையில் வியனரசு தனது இல்லத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது போலீஸார் கதவைத் தட்டி அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது. பிறகு ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்ற ஏரியாவான தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்றார்கள்.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வியனரசுவை கைது செய்வதாக முதலில் அவரது உறவினர்களிடம் போலீஸார் கூறியிருக்கிறார்கள். பின்னர் வியனரசு மீது 144 தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக அவரை கைது செய்வதாக போலீஸார் கூறியிருக்கிறார்கள். கைது செய்து சுமார் 40 மணி நேரம் கடந்த நிலையில் நேற்று மாலையில் அவரை போலீஸார் ‘ரிமாண்ட்’ செய்ததாக தெரிகிறது. அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
வியனரசு கைது குறித்து தகவல் கிடைத்ததும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் உள்ள கட்சி வழக்கறிஞர்களை தொடர்புகொண்டு ஜாமீன் பெறும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார். சென்னையிலும் ஐபிஎல் போராட்டத்தில் போலீஸாரை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி மதன்குமாரை நேற்று முன் தினம் போலீஸார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சீமானையும் போலீஸார் கைது செய்ய இருப்பதாக தகவல்கள் வந்தன. அதைத் தொடர்ந்தே அடுத்தடுத்து இரு வழக்குகளில் முன் ஜாமீன் பெறும் முயற்சிகளில் இருக்கிறார் அவர். வேல்முருகனைத் தொடர்ந்து போலீஸாரின் கவனம், நாம் தமிழர் கட்சி மீது பாய்ந்திருப்பதாக கூறப்படுகிறது.