இந்தியா முழுவதும் நீட் தேர்வு நேற்று வெளியிடப்பட்டது. இதில் பிரதீபா என்ற மாணவி தேர்ச்சி பெறாத காரணத்தினால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சேத்துப்பட்டையில் உள்ள பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி பிரதீபா. இவரது தந்தை சண்முகம் விவசாயி மற்றும் தாய் அமுதா கூலி தொழிலாளி. பிரதீபாவுக்கு 21 வயது எஞ்சினியரிங் படிக்கும் அண்ணன் பிரவீன்ராஜ் மற்றும் 24 வயது அக்கா உமா பிரியா உள்ளார். இவர்கள் இரண்டு பேரின் வழிகாட்டுதலின் பேரில் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார் பிரதீபா.
சென்ற ஆண்டு நீட் தேர்வு எழுதியபோது 155 மதிப்பெண்களும், இந்த ஆண்டு 39 மதிப்பெண்களும் பெற்றார். கடந்த ஆண்டு இவர் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணிற்கு சித்தா மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அதையும் தவிர்த்து, டாக்டர் ஆகும் கனவுடன் இந்த வருடமும் நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்த ஆண்டு நீட் தேர்விலும் ஆங்கில மருத்துவ படிப்பிற்கு தேர்ச்சி அடையவில்லை என்று அறிந்ததும் எலி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டார். பிரதீபா குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற காப்பாற்ற முயன்றனர். ஆனால் எந்தப் பலனுமின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுவயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்த பிரதீபா, பத்தாம் வகுப்பின் பொதுத் தேர்வில் 495 மதிப்பெண் பெற்றார். 10ம் வகுப்பை அரசுப் பள்ளியில் படித்தவரின் மருத்துவப் படிப்பு கனவை உணர்ந்த பெற்றோர் வறுமையிலும், மேல்நிலைப் படிப்பிற்காக தனியார் பள்ளியில் சேர்த்தனர். விடாமுயற்சியுடன் படித்த பிரதீபா 12ம் வகுப்பு தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றார்.
மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த பிரதீபா நீட் தோல்வியால் தற்கொலை செய்து தனது உயிரையே மாய்த்துக்கொண்ட சம்பவத்தால் அவர்களது குடும்பம் மற்றும் விழுப்புரம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
2018ம் ஆண்டின் நீட் தேர்வு தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இதில் 39.55% மட்டுமே தேர்ச்சிப்பெற்றனர். தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்குச் சென்று தேர்வெழுதிய பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சிப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.