2016ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு, 2017-ல் அதிமுக பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட சசிகலா, சட்டமன்றக் கட்சித் தலைவராக் தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலாவின் முதல்வராகும் கனவு சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை 10 கோடி ரூபாய் அபராதம் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததால் தகர்ந்தது.
சசிகலா சிறை சென்ற பிறகு, அவரை எதிர்த்து தர்ம யுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வமும், சசிகலா முதல்வராக தேர்வு செய்த எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கட்சியைக் கைப்பற்றினர். சசிகலாவையும் அவருடைய சகோதரி மகன் டிடிவி தினகரனையும் அவர்களின் உறவினர்களையும் அதிமுகவில் இருந்து நீக்கினர்.
இதனிடையே, மறைந்த ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகரில் சுயேட்சையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். அதன் பிறகு, அவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். அதற்குள் 4 ஆண்டுகள் கடந்துவிட்டது.
சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனையை முடித்து விடுதலையாகி இன்று சென்னை திரும்பியுள்ளார். சசிகலா அதிமுகவைக் கைப்பற்றும் முயற்சிகளை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. அவர் அதிமுகவைக் கைப்பற்றினாலும், கைப்பற்றாவிட்டாலும் அல்லது அமமுக வெற்றிபெற்றாலும் அவரால் முதல்வராக முடியாது. ஏனென்றால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அதே நேரத்தில், தற்போது சிக்கி முதல்வராக இருக்கும் பிரேம் சிங் தமாங் இதே போல, தண்டனை பெற்று இருந்தாலும் அவருக்கு தேர்தல் ஆணையம் தளர்வு அளித்தது. அதன்படி, அவர் முதல்வரானார். அது போல, சசிகலாவுக்கு தளர்வு அளிக்கப்படக் கூடும். தளர்வு அளிக்கப்பட்டால் வருகிற தேர்தலில் அவரால் போட்டியிட முடியுமா? என்ற கேள்விகளும் விவாதங்களும் எழுந்துள்ளன்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்று தேர்தலில் போட்டியிடவும் முதல்வராகவும் தளர்வு பெற்ற சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் யார்? அந்த விவகாரத்தின் பின்னணி என்ன என்று பார்ப்போம்.
பிரேம் சிங் தமாங், கால்நடை துறை அமைச்சராக இருந்தபோது 1996ம் ஆண்டு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த வழக்கு நீண்ட காலமாக இழுத்துக்கொண்டு அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. ஆகஸ்ட் 10, 2018ல் சிறைதண்டனை முடிந்து பிரேம் சிங் தமாங் வெளியே வந்தார்.
2019ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி பாஜகவோடு கூட்டணி அமைத்து அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் 17 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்தது. பிரேம் சிங் தமாங் முதல்வராக விரும்பினார். கட்சியினரும் அவர்தான் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அடுத்த 6 ஆண்டுகளுக்கு பிரேம் சிங் தமாங் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்ட வல்லுநர்கள் கூறினார்கள்.
பிரேம் சிங் தமாங் முதல்வராக வேண்டுமானால், அடுத்த 6 மாதங்களுக்குள் சிக்கி சட்டசபையில் ஏதாவது ஒரு அவையில் அவர் கட்டாயம் உறுப்பினராக வேண்டும். அதனால், பிரேம் சிங் தமாங், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தனக்கு 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட கூடாது என்று விதிக்கப்பட்ட தடையை தளர்த்த வேண்டும் என்று கோரினார். தேர்தல் ஆணையமும் அவரது கோரிக்கையை ஏற்று தளர்வு அளித்தது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 11 படி தேர்தல் ஆணையம் சில காரணங்களுக்காக இந்த விதிமுறை தளர்வு வழங்க முடியும். தேர்தலில் போட்டியிட முடியாது என்ற உத்தரவை ஒரு சிலருக்கு நிறுத்தி வைக்க முடியும் அல்லது அந்த தண்டனை காலத்தை குறைக்க முடியும் என்ற அடிப்படையில் பிரேம் சிங் தமாங்-கிற்கு தளர்வு அளித்தது.
அதனால், பிரேம் சிங் தமாங்கிற்கு வழங்கப்பட்ட தளர்வு சலுகை சசிகலாவுக்கு அளிக்கபடுமா? அவர் தேர்தலில் போட்டியிடுவாரா? என்ற கேள்விகள் விவாதங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், “சசிகலா முதல்வராகவும் முடியாது. தேர்தலில் போட்டியிடவும் முடியாது. மோடி அரசியல் இவர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது. மோடியை எதிர்த்து அரசியல் செய்ய இவர்களுக்கு முதுகெலும்பு இல்லை. தளர்வு கேட்டு இவர்கள் நீதிமன்றத்துக்கு செல்லலாம். அங்கேயும் இவர்களுக்கு தளர்வு கிடைக்காது. தளர்வு கிடைக்காது என்பதால் இவர்கள் நீதிமன்றத்துக்கே செல்லமாட்டார்கள். நான் முதலிலேயே சொன்னேன். நான் முதலிலேயே சொன்னேன். சசிகலா முதல்வராக சத்தியப் பிரமானம் செய்ய வரமாட்டார்கள் என்று சொன்னேன். அதே போல வரவில்லை. அவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கமாட்டார்கள் என்று சொன்னேன். கொடுக்கப்படவில்லை. சசிகலா ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலையாக மாட்டார்கள் என்று சொன்னேன். விடுதலையாகவில்லை. ஒரு அரசியல்வாதி கைதிக்கு கொஞ்ச நாளாவது பரோலில் சென்றிருப்பார்கள். அதையெல்லாம் முழுவதுமாக கணக்குப் பார்த்து மொத்த தண்டனைக் காலமும் முடிந்தபிறகுதான் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர்கள் வரும்போது அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்துவிட்டார்கள். நான் சொன்னதுதான் நடக்கிறது. அதனால், ஒரு அரசியல் முன் கணிப்பாளராக, சசிகலா ஓய்வு எடுக்கலாம். அல்லது தினகரனுக்கு ஆசி வழங்கலாம்” என்று கூறினார்.
பிரேம் சிங் தமாங்கிற்கு தளர்வு அளிக்கப்பட்டது போல, சசிகலாவுக்கு தளர்வுக்கு அளிக்கப்பட்டாலும் அவர் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று அரசியல் நோக்கர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.