/tamil-ie/media/media_files/uploads/2021/02/aiadmk-office-vk-sasikala.jpg)
VK Sasikala News In Tamil: சசிகலா வருகையை முன்னிட்டு சென்னையில் அதிமுக தலைமை அலுவகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. சசிகலா பேரணியாக செல்லும் இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை முடிந்து, திங்கட்கிழமை (பிப்ரவரி 8) சசிகலா சென்னை திரும்புகிறார். பெங்களூருவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா, ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடி கட்டி வெளியே வந்தார். எனவே சென்னைக்கும் அதேபோல அதிமுக கொடி கட்டிய காரில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக கொடி கட்டிய காரை அவர் பயன்படுத்தக்கூடாது என அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம் ஆகியோர் டிஜிபி திரிபாதியை சந்தித்து புகார் கொடுத்தனர். சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்கும் பேரணி மூலமாக கலவரத்திற்கு திட்டமிடுவதாகவும் சசிகலா, தினகரன் ஆகியோர் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.
அதேபோல அமைச்சர்கள் தரப்பு இந்தப் பேரணியில் குழப்பம் விளைவித்து கலவரத்திற்கு முயற்சிக்கக்கூடும் என டிடிவி தினகரன் புகார் கூறினார். சென்னை கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால் சசிகலா அங்கு செல்ல வாய்ப்பு குறைவு.
இதற்கிடையே சசிகலா பேரணியாக அதிமுக தலைமை அலுவலகம் செல்வார் என சமூக வலைதளங்களில் சிலர் கருத்து கூறி வருகின்றனர். இந்தப் பின்னணியில் சனிக்கிழமை இரவு முதல் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
எனினும் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றுவோம் என சசிகலா தரப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.