VK Sasikala News In Tamil, VK Sasikala Tamil Nadu Arrival: இபிஎஸ் ஆட்சி இன்று கவிழ்ந்து விடும்... நாளை கவிழ்ந்துவிடும் என திமுக தேதி குறித்தபோதுகூட, தமிழக ஆளும்கட்சி இவ்வளவு பதறவில்லை. சசிகலா சிறையில் 4 ஆண்டு தண்டனை முடிந்து, தமிழகம் திரும்புவதில் மிரண்டுதான் போயிருக்கிறார்கள்.
அதிமுக கொடியை பயன்படுத்துவது தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் மீது புகார் கொடுத்துவிட்டு, வெளியே வந்த அமைச்சர்கள் பேட்டி கொடுக்க ஒருவர் மாற்றி ஒருவர் தயங்கியது இந்தப் பதற்றத்தின் வெளிப்படையான சாட்சி! பாஜக பற்றிப் பேச பவர்ஃபுல் அமைச்சர்கள் அத்தனை பேரும் தயங்கினாலும், அசராமல் பதிலடி கொடுப்பவர் அமைச்சர் ஜெயகுமார். மார்க்சிஸ்ட் கட்சியின் பேராசிரியர் அருணன் ஒரு ஊடக விவாதத்தில் இதை சுட்டிக்காட்டி, ஜெயகுமாரை சிலாகித்தார். அதே ஜெயகுமார்தான் சனிக்கிழமை சசிகலா பற்றிப் பேச அப்படி பம்மினார்.
டிடிவி தினகரனை காரசாரமாகத் தாக்கும் அமைச்சர்கள் சிலருமே சசிகலா பற்றிப் பேச பம்முவதற்கு காரணம், ஏதோவொரு நேரத்தில் சசிகலா தயவில் கட்சியில் அவர்கள் பலன் அடைந்திருப்பதும்தான். உதாரணத்திற்கு, ஓபிஎஸ் விட்டுச் சென்ற நிதி அமைச்சர் பொறுப்பு யாருக்கு? என்கிற கேள்வி எழுந்தபோது சசிகலா சிபாரிசில் அதைப் பெற்றவர் ஜெயகுமார். அணிகள் இணைப்பில் மீண்டும் ஓ.பி.எஸ்.ஸிடம் அந்தப் பதவியை ஜெயகுமார் விட்டுக் கொடுத்தார்.
கொங்கு பகுதியில் இன்று செல்வாக்குடன் திகழும் விஐபி.க்கள் பலருமே சசிகலா ஆதரவு வட்டத்தினர்... குறிப்பாக ராவணன் தயவில் முன்னுக்கு வந்தவர்கள்தான். டெல்டா மற்றும் தென் மாவட்ட அமைச்சர்கள் யாரும் சசிகலாவுக்கு எதிராக வாய் திறக்கவே தயாரில்லை. காரணம், வாக்கு வங்கி ரீதியாகவும் அவரவர் தொகுதிகளில் இது பாதிப்பை உருவாக்கும் என நினைக்கிறார்கள்.
வட மாவட்ட அமைச்சர்களான சி.வி.சண்முகம், வீரமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் அதிகமாக சசிகலா தயவை எதிர் நோக்கியவர்கள் இல்லை. எனவே அவர்கள் மட்டுமே சசிகலாவை அதிகம் பொருட்படுத்துவதில்லை. மற்ற பெரும்பாலான அமைச்சர்கள் மரியாதை நிமித்தம் சசிகலாவை சந்திக்கவும் விரும்புகிறவர்கள்தான்!
அப்படி சந்திப்புகள் நிகழ்ந்தால், அது கட்சிக்குள் இன்னும் குழப்பத்தை அதிகரிக்கும். எனவேதான் சனிக்கிழமை தலைமைக் கழகத்தில் ஆலோசனைக் கூட்டம் போட்டு, ‘கட்சிக்குள் ஒற்றுமை’ பற்றி பேசப்பட்டிருக்கிறது.
சசிகலாவை அதிமுக.வில் இருந்து அப்புறப்படுத்த முன்பு டெல்லி ஒத்துழைப்பு பெரிதாகக் கிடைத்தது. ஆனால் அண்மைக்காலமாக நிகழ்ந்த சில அரசியல் முன்னெடுப்புகளைத் தொடர்ந்து, இந்த விஷயத்தில் பாஜக அடக்கி வாசிக்க முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே அதிமுக கொடியை பயன்படுத்துவது, அதிமுக பொதுச்செயலாளர் என்கிற உரிமையை நிலைநாட்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை வேகப்படுத்துவது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் சசிகலா. இந்த விஷயத்தில் பாஜக உதவி கிடைக்காது என்பது அதிமுக பதற்றத்திற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.
மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்ட ஒரே வாரத்தில் பராமரிப்புப் பணி என மூடியது, அதிமுக தலைமை அலுவலத்தில் போலீஸ் பாதுகாப்பு, சுற்றிலும் அவசரமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவது, அமைச்சர்களின் டிஜிபி அலுவலக படையெடுப்பு உள்ளிட்ட அனைத்துமே அதிமுக தரப்பின் பதற்றத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
சென்னை தி.நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள ஒரு இல்லத்தில்தான் சசிகலா தங்க இருக்கிறார். போயஸ் கார்டனுக்கு இணையான முக்கியத்துவத்தை அந்தப் பகுதி அடுத்த சில நாட்கள் பெறக்கூடும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"