சசிகலாவை இனி சகோதரி என அழைக்க மாட்டேன் : திவாகரன் காட்டம்

'சசிகலாவின் பெயரை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் வழங்கியது தினகரனின் பிளாக்மெயில் அரசியல். ஓ.பன்னீர் செல்வம் , சசிகலா விரோதத்திற்கு தினகரன் தான் காரணம்.'

சசிகலா, எனது முன்னாள் சகோதரி என திவாகரன் விரக்தியாக பேட்டி அளித்தார். தனது பெயரை பயன்படுத்த சசிகலா தடை விதித்ததால் இப்படி கூறியிருக்கிறார்.

சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். அவர் சிறைக்கு சென்ற பிறகு அதிமுக.வை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். டிடிவி தினகரன், சசிகலாவை பொதுச்செயலாளராகக் கொண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும், டிடிவி தினகரனுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஏற்கனவே இயங்கிய அம்மா அணியை திவாகரன் புதுப்பித்தார். அவரும் போஸ்டர்களில் சசிகலா படத்தை பயன்படுத்தினார். இதைத் தொடர்ந்து சிறையில் இருக்கும் சசிகலா தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் மூலமாக திவாகரனுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார்.

சசிகலா அனுப்பிய அந்த நோட்டீஸில், ‘அரசியல் ரீதியாக பேட்டிகளில் என்னை உங்களது சகோதரி என முன்னிலைப்படுத்துவதையோ, எனது படங்களை பயன்படுத்துவதையோ அனுமதிக்க முடியாது. என்னால் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டவர் டிடிவி தினகரன் தான். அவருக்குத்தான் எனது அங்கீகாரம்’ என குறிப்பிட்டார்.

சசிகலாவின் நோட்டீஸ் குறித்து இன்று (மே 14) முதல் முறையாக திவாகரன் கருத்து தெரிவித்தார். மன்னார்குடியில் நிருபர்களிடம் பேசிய அவர், ‘எனக்கு மன நலம் சரியில்லை என்று என் மீது உள்ள ஆதங்கத்தில் தினகரன் கூறி உள்ளார். சசிகலாவை இனி நான் சகோதரி என்று அழைக்க மாட்டேன்; அவர் என் முன்னாள் சகோதரி. சசிகலா நோட்டீஸ் தந்ததால் எங்கள் அரசியல் பயணம் நின்று விடாது. தினகரனின் மிரட்டல் அரசியலின் உச்சம்.

சசிகலாவின் பெயரை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் வழங்கியது தினகரனின் பிளாக்மெயில் அரசியல். ஓ.பன்னீர் செல்வம் , சசிகலா விரோதத்திற்கு தினகரன் தான் காரணம். யாரும் பிறக்கும்போது பதவியுடன் பிறப்பதில்லை. எனக்கு மனநிலை சரியில்லை என்று சொல்வது கையாலாகாதத்தனம்; மனநிலை சரியில்லாத எனக்கு ஏன் நோட்டீஸ் கொடுத்தார்கள்?’. இவ்வாறு திவாகரன் கூறினார்.

 

×Close
×Close