சசிகலா விடுதலையாகும் தேதி வெளியான நிலையில், அவர் ஆர்.டி.ஐ மூலம் தன்னைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை அளிக்க கூடாது என்று பரப்பன அக்ரஹார சிறை தலைமை கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில், தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். சசிகலா தண்டனைக் காலம் முடிவடைந்து விரைவில் சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்றும் அவர் விடுதலையாகி வெளியே வந்தால் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே, நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சசிகலா எப்போது விடுதலையாகிறார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, சசிகலா, 2021ம் ஆண்டு, ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆகிறார் என்று சிறைத்துறை பதில் அளித்திருந்தது.
இதனால், சசிகலாவின் ஆதரவாளர்கள், அமமுகவினர் அவருடைய விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், என்னுடைய சிறை தண்டனை மற்றும் விடுதலை தொடர்பான தனிப்பட்ட விவரங்களை மூன்றாம் நபர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டால் தெரிவிக்க கூடாது என்று பரப்பன அக்ரஹார சிறையின் தலைமை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வி.கே.சசிகலா, பரப்பன அக்ரஹார சிறையின் தலைமைக் கண்காணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய சிறை தண்டனை மற்றும் விடுதலை உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக மூன்றாம் தரப்பினர் பலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிந்துகொண்டேன். இந்த மூன்றம் தரப்பினரின் மனுக்கள், விளம்பரம் அடைவது, அரசியல் உள்நோக்கம் என குறிப்பிட்ட காரணங்களைக் கொண்டுள்ளன. சிலருடைய விண்ணப்பங்களின் நோக்கங்கள், நான் சட்டப்பூர்வமாக சரியான நேரத்தில் விடுதலை ஆவதை சிக்கலாக்கும் நோக்கம் கொண்டவை.
இதே போல ஒரு விஷயத்தில், வேதபிரகாஷ் ஆர்யாஸ் திகார் மத்திய சிறை - மத்திய தகவல் ஆணையம் வழக்கில், ஒரு விண்ணப்பதாரர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், திகார் சிறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு விசாரணைக் கைதியைப் பற்றிய தகவல்கள் கேட்கப்பட்டது. அப்போது, திகார் சிறையின் பொது தகவல் ஆணையம், விசாரணைக் கைதி குற்றம் உறுதி செய்யப்படுவது தனிப்பட்ட விஷயம் எனதால் தகவல்களை வழக்க மறுத்துவிட்டது. ஆர்.டி.ஐ சட்டத்தின்படி, அந்த நபரின் அடையாளத்தை வெளிப்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் ஆணையத்தின் கருத்தையே பொது தகவல் அதிகாரியும் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் அந்தரங்க உரிமைகள் அடிப்படை உரிமைகள் என்ற பார்வையைக் குறிப்பிட்டு பொது தகவல் அதிகாரி முடிவெடுத்தார். ஆகையால், என்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதற்கு வழிவகுக்கக் கூடிய, என்னுடைய சிறை தண்டனை உள்ளிட்ட தகவல்களை அளிக்க கூடாது.
மேலும், என்னுடைய சிறை தண்டனை மற்றும் சிறையில் இருந்து விடுதலையாகும் தேதி தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிந்துகொள்ளக் கோரும் எந்த விண்ணப்பங்களையும் அனுமதிக்கக் கூடாது. அதுவே நீதியை வழங்கும் என்று உயர் அதிகாரிகளை வேண்டுகிறேன்” என்று சசிகலா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மறுப்புக் கடிதம் 2020 மார்ச் மாதம் முதல் வாரத்தில் என்னுடைய வழக்கறிஞருக்கு என்னால் அறிவுறுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டு ஸ்பீடு போஸ்ட்டில் அனுப்பப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த மறுப்புக் கடிதம் எனக்கு வாசித்துக் காட்டப்படு தமிழில் விளக்கி கூறப்பட்டது. அதில் நான் கூறியபடி அப்படியே சரியாக இருந்ததை தெரிந்துகொண்டேன் என்று சசிகலா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.