போயஸ் கார்டனில் கிடைத்த குட்கா ஆவணம் : சசிகலாவுக்கு புதிய சிக்கல்?

போயஸ் கார்டனில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியபோது குட்கா ஊழல் சம்பந்தப்பட்ட ஒரு ஆவணம் சிக்கிய தகவல் வெளி வந்திருக்கிறது.

போயஸ் கார்டனில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியபோது குட்கா ஊழல் சம்பந்தப்பட்ட ஒரு ஆவணம் சிக்கிய தகவல் வெளி வந்திருக்கிறது.

VK Sasikala, Poes Garden

குட்கா ஊழல் வழக்கில் வருமான வரித்துறையின் பதில் மனு நகலின் ஒரு பகுதி

போயஸ் கார்டனில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையம் அமைந்திருக்கிறது. இங்கு கடந்த நவம்பர் 17-ம் தேதி மத்திய அரசுக்கு உட்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ஜெயலலிதாவின் அறை திறக்கப்படவில்லை என்றும், சசிகலாவின் அறையை மட்டும் திறந்து சோதனையிட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

போயஸ் கார்டனில் நடைபெற்ற சோதனையில் ஓரிரு பென் டிரைவ்களையும், பழைய லேப் டாப் ஒன்றையும் அதிகாரிகள் கைப்பற்றியதாக அப்போது தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் வருமான வரித்துறையினர் தாக்கல் செய்த பதில் மனு ஒன்றில், ‘போயஸ் கார்டனில் சசிகலா அறையில் குட்கா ஊழல் தொடர்பான ஆவணம்’ கிடைத்த தகவலை தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

வருமான வரித்துறையினரின் அந்த பதில் மனுவின் நகலில் சில பக்கங்கள் நமக்கு கிடைத்தன. அந்த பதில் மனுவில் வருமான வரித்துறை (புலனாய்வு) முதன்மை இயக்குனர் சுஷி பாபு வர்க்கீஸ் கூறியிருப்பதாவது:

குட்கா (போதைப் பொருள்) உற்பத்தியாளர்களின் குடோன்களில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பான 11-8-2016 தேதியிட்ட கடிதம் ஒன்றை ‘ஸ்பெஷல் மெசென்ஜர்’ மூலமாக டி.ஜி.பி.க்கு கொடுத்து அனுப்பினோம். டிஜிபி.யின் சிறப்பு செயலாளரிடம் ‘அக்னாலட்ஜ்மென்ட்’ பெற்றுக்கொண்டு, அந்தக் கடிதம் டெலிவரி செய்யப்பட்டது.

போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் சசிகலா தங்கியிருந்த அறையில் நவம்பர் 17-ம் தேதி மற்றொரு சோதனை நடத்தப்பட்டது. அப்போது 2.9.2016 தேதியிட்டு அப்போதைய டிஜிபி, முதல்வருக்கு அனுப்பிய ஒரு கடிதத்தின் ஒரிஜினல் கிடைத்தது. அந்தக் கடிதத்துடன் வருமான வரித்துறை சார்பில் 11-8-2016 தேதியிட்டு டிஜிபி.க்கு அனுப்பப்பட்டிருந்த ரகசிய கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது.

மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இதே விவகாரம் தொடர்பாக கதிரேசன் தொடர்ந்த வழக்கில், 6-7-2017-ல் ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு உரிய ஆவணங்களை அரசு வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்தோம். அதில் 28-7-2017 அன்று இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது’ என கூறியிருக்கும் வருமான வரித்துறை முதன்மை இயக்குனர் சுஷி பாபு வர்க்கீஸ், குட்கா உற்பத்தியாளர்கள் மூலமாக அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்ட தொகை உள்ளிட்ட பல விவரங்களை தெரிவித்திருக்கிறார்.

குட்கா ஊழல் வழக்கின் முழு பின்னணி வருமாறு :

தமிழகத்தில் 2013-ம் ஆண்டு குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தடை செய்தார். ஆனாலும் கடைகளில் அவற்றின் விற்பனையை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் லஞ்சமும் வரி ஏய்ப்பும் நடப்பதாக மத்திய அரசின் வருமான வரித்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.

இதைத் தொடர்ந்து 2016 ஜூலை 8-ம் தேதி சென்னையில் பிரபல குட்கா நிறுவனங்களின் குடோன்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது ஒரு குட்கா நிறுவனத்தின் பெண் கணக்காளரிடம் இருந்து, குறிப்பு நோட்டு ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் தமிழக அமைச்சர் ஒருவருக்கும், போலீஸ் உயர் அதிகாரிகள் இருவர் உள்பட பலருக்கும் மொத்தம் 39.91 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது. அதாவது சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதற்காக இந்தத் தொகையை மேற்படி நிறுவனம் வழங்கியதாக சொல்லப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக பதவி வகித்தவர் டி.கே.ராஜேந்திரன். அவருக்கு ஓய்வுக்கு பிறகும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தொழிற்சங்க வாதியான கதிரேசன், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் குட்கா ஊழலை விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ஊழல் கண்காணிப்பு ஆணையரான ஜெயகொடி விசாரிப்பார் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அண்மையில் ஜெயகொடி அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, மோகன் பியாரே என்கிற ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையேதான் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு, திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்தும் திமுக தரப்பில் நீதிமன்றத்தை அணுகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சென்னை கமிஷனரும் தற்போதைய டிஜிபி.யுமான டி.கே.ராஜேந்திரன் ஆகியோருடன் சசிகலாவும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. டிஜிபி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய ஒரிஜினல் கடிதம் சசிகலாவின் அறைக்கு எப்படி வந்தது? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

 

×Close
×Close