சசிகலாவுக்கு மீடியாவில் முதல் பக்கச் செய்திகள் வெளியிடுவது தொடர்பாக நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் கலவையாக ரீயாக்ஷன் கொடுக்கிறார்கள். சசிகலாவால் உருவாக்கப்பட்ட எடப்பாடியிடம் சீட்டுக்காக பாஜக நிற்கவில்லையா? என சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற வி.கே சசிகலா 4 வருட சிறைவாசம் முடித்து, வருகிற 27-ம் தேதி வெளியே வருகிறார். இதற்கிடையே நேற்று (20-ம் தேதி) திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையொட்டி மீடியா முழுக்க சசிகலா தொடர்பான செய்திகள் நிறைந்து கிடக்கின்றன.
இந்தச் சூழலில் பாஜக தலைவர்களில் ஒருவரும், நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஊழல்வாதியாக நிரூபிக்கப்பட்ட, சட்ட விரோதமாக சொத்து சேர்த்த, நட்பு மூலமாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய, அனைத்து தவறான செயல்களுக்காகவும் சிறைத் தண்டனை பெற்ற ஒருவரை இன்னும் ஏன் முதல் பக்கச் செய்தியாக போட்டுக் கொண்டிருக்கிறோம்?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் குஷ்பு. இதில் சசிகலா பெயரை குஷ்பு வெளிப்படையாக கூறாவிட்டாலும், அவரது பதிவு சசிகலா பற்றியதுதான் என்பதை அனைவருமே புரிந்து கொள்ளும்படி இருக்கிறது.
இதற்கு அவரது பக்கத்தில் பின்னூட்டம் செய்திருக்கும் ஒருவர், ‘அதே ஊழல்வாதி நியமித்த முதல் அமைச்சரிடம்தான் சீட்டுக்காக பாஜக நிற்கிறது’ என குறிப்பிட்டிருக்கிறார். இன்னொருவர் தனது பின்னூட்டத்தில், ‘நீங்களும் அவர்களை புகழ்ந்தீர்கள். நட்பு வைத்திருந்தீர்கள்’ என கூறியிருக்கிறார்.
இன்னொரு ட்விட்டர்வாசி, ‘உங்கள் ரோல் மாடல் ஜெயலலிதா பற்றி பேசுகிறீர்களா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார். மற்றொருவர், ‘துரதிருஷ்டவசமாக இது தமிழகத்தின் இன்றைய பெரும்பான்மையான எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தும். ஒரே வித்தியாசம், அவர்கள் அதிருஷ்டவசமாக அல்லது சாதுர்யமாக சிறைத் தண்டனையில் இருந்து தப்பியிருக்கிறார்கள்’ என குறிப்பிட்டிருக்கிறார்.
‘அர்னாப்பையும், சீன ஆக்கிரமிப்பையும் ஊடகங்கள் முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்க வேண்டும்’ என ஒருவர் கூறியிருக்கிறார். ‘நீங்கள் குறிப்பிட்டிருப்பது எல்லாமே ஜெயலலிதாவுக்கும் பொருந்தும்’ என இன்னொருவர் கூறியிருக்கிறார். இப்படி விதவிதமான கமெண்ட்கள் வந்து விழுந்தபடி இருக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"