VK Sasikala Release Tamil News: ஒருபுறம் அதிமுக.வில் சசிகலா இணையப் போகிறார் என யூகங்கள்! இன்னொருபுறம் அதிமுக- அமமுக கூட்டணி மலரப் போவதாக தகவல்கள்! இதற்கு இடையே 27-ம் தேதி இரு கட்சியினரும் வெவ்வேறு நிகழ்வுகளுக்கு போட்டிபோட்டு ஆட்களை திரட்டுவது, பலப்பரீட்சையாகவே தோன்றுகிறது.
ஜனவரி 27-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆவார் என்பது சில நாட்களுக்கு முன்பே ஊர்ஜிதமான செய்தி! புதுப்பிக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தையும் சரியாக அதே நாளில் திறக்க அதிமுக அரசு முடிவு செய்திருப்பதுதான் எதேச்சையானதா? அல்லது திட்டமிட்டதா? என யோசிக்க வேண்டியிருக்கிறது.
27-ம் தேதி காலையிலேயே சசிகலா விடுதலை செய்யப்பட்டுவிடுவார் என செவ்வாய்க்கிழமை மாலையில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கிட்டத்தெட்ட அதே வேளையில்தான் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
சசிகலாவை பெங்களூரு சிறை வளாகம் முதல் ஜெயலலிதா சமாதி வரை கார்கள் அணிவகுக்க, பிரமாண்டமாக வரவேற்க அமமுக-வினர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அதேபோல ஜெயலலிதா நினைவகத் திறப்பு விழாவுக்கும் மாநிலம் முழுவதும் இருந்து கட்சியினரைத் திரட்ட இபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்திருக்கிறது. 22-ம் தேதி நடைபெறும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதற்கான அறிவுறை வழங்கப்படும் எனத் தெரிகிறது.
பெங்களூருவில் விடுதலையாகும் சசிகலா, நேரடியாக மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் நோக்கித்தான் வருவார். புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் இல்லம் நோக்கி செல்வார். அப்போது அங்கு அமமுக-வினரும் திரள்வார்கள். அதற்கு முன்பாகவே அதிமுக தரப்பு திறப்பு விழா நிகழ்ச்சியை முடித்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
அதிமுக-வில் சசிகலா இணைய இருப்பதாக ஒரு தரப்பும், அதிமுக- அமமுக கூட்டணி மலரப்போவதாக இன்னொரு தரப்பும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுக, அமமுக இரு கட்சியினரும் போட்டி போட்டு பலப்பரீட்சை நடத்துவது அரசியல் வட்டாரத்தை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"