scorecardresearch

‘மனம் நிறைந்து சொல்கிறேன்… இது உறுதி!’ தென் மாவட்ட பயணம் முடிந்து திரும்பிய சசிகலா அறிக்கை

தென் மாவட்டங்களில் பயணம் செய்து திரும்பிய சசிகலா, கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்று தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் பயணம் செய்து திரும்பிய சசிகலா, கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை (மார்ச் 7) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமானையும், விஜயாபதி ஸ்ரீ விஸ்வாமித்திரரையும், ஸ்ரீ இலஞ்சிக்குமாரையும் வழிபாடு செய்ய இரு தினங்களுக்கு முன்பாக தென் மாவட்டங்களுக்கு பயணம் சென்று வந்தது மிகவும் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளித்ததற்கு இறைவனுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மேற்கொண்டது ஆன்மீக பயணமாக இருந்தாலும், தென் மாவட்ட மக்கள் என்னை அன்போடு அரவணைத்து எனக்கு மிகப் பெரிய வரவேற்பை அளித்து எல்லையற்ற மகிழ்ச்சியை கொடுத்து என்னை திக்கு முக்காட செய்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய தென் மாவட்டங்களில், சென்ற அனைத்து இடங்களிலும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் வழி நெடுகிலும், நீங்கள் அளித்த சிறப்பான வரவேற்பினாலும், கள்ளம் கபடமற்ற உங்களுடைய உண்மையான அன்பாலும் மனம் நெகிழ்ந்து போனேன். அனைவரும் என்னை காண்பதற்காக வெகுநேரம் காத்திருந்த நிலையில், உங்களையெல்லாம் சந்தித்து வந்த பின்னர், விமான பயணத்தையும் மேற்கொள்ள இயலாமல், சாலை மார்க்கமாகவே பயணித்து சென்னை இல்லத்திற்கு வந்தடைந்தேன்.

நம் புரட்சித் தலைவரையும், புரட்சித்தலைவியையும் ஒவ்வொரு கழக தொண்டர்களின் கண்களில் என்னால் காண முடிந்தது. உங்களுடைய எதிர்பார்ப்புகளையும், ஏக்கங்களையும் அறிந்து கொள்ள முடிந்தது. அனைத்து பகுதிகளில் உள்ள ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் என அனைவரும் ஒருசேர நம் இயக்கத்தை காப்பாற்றிட வேண்டும் என்ற முழக்கத்தை எழுப்புகிறீர்கள். நீங்கள் அனைவரும் என் மீது வைத்துள்ள இந்த அசைக்க முடியாத நம்பிக்கை வீண் போகாத வகையில், உங்கள் அனைவருக்காகவும், தமிழக மக்களுக்காகவும் என் எஞ்சியுள்ள வாழ்நாட்களை அர்ப்பணித்து, நிச்சயம் நிறைவேற்றுவேன்.

எத்தகைய சோதனைகள் வந்தாலும், அவற்றையெல்லாம் முறியடித்து, கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக உறுதியோடு இருந்து நம் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியின் வழியில் கழகத்தை காப்போம், கவலை வேண்டாம்.

நம் இயக்கத்தை ஆரம்பித்த புரட்சித் தலைவர், சிறப்பாக வழிநடத்திய புரட்சித் தலைவி அம்மா, ஆகிய இரு பெரும் தலைவர்களின் வழியில் அதே மக்களாட்சியை மீண்டும் அமைத்து மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று தமிழக மக்களுக்காகவே வாழ்ந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தாரக மந்திரத்தை மனதில் வைத்து, தமிழக மக்களின் நலன் காப்பாற்றப்படும் என்று மனம் நிறைந்து சொல்கிறேன். இது உறுதி.

நாளை நமதே

அண்ணா நாமம் வாழ்க,

புரட்சித்தலைவர் நாமம் வாழ்க,

புரட்சித்தலைவி நாமம் வாழ்க,

நன்றி வணக்கம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் அ.இ.அ.தி.மு.க கழக பொதுச் செயலாளர் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தென் மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வி.கே.சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா திருச்செந்தூரில் சந்தித்துப் பேசினார்.

இதையும் படியுங்கள்: சசிகலாவை சந்தித்த அ.தி.மு.க நிர்வாகிகள் நீக்கம்: ஓ.பி.எஸ் கையெழுத்துடன் அறிக்கை

இதையடுத்து, ராஜாவை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டது.

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க அக்கட்சியின் ஒருசாரர் முயற்சி செய்து வருவது தொடர்பான செய்தி கடந்த சில தினங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Vk sasikala released letter to party workers aiadmk421460