தமிழக அரசியலில் நீங்க முடியாத சக்தியாக விலங்கிய முன்னாள் முதல்வர் ஜெயல்லிதா சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். அவருடன் சேர்த்து அவரது தோழி ச்சிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராமும் விதிக்கப்பட்டது.
ஆனால் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு மீதமுள்ள மூவருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையை முடித்து விரைவில் வெளியாக உள்ளார். அவருக்காக சென்னை போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகியுள்ளதாக அமமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறையில் உள்ள சசிகலா வருகிற 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டது. அவர் அபராத தொகையை செலுத்தவில்லை என்றால் விடுதலை நாள் தள்ளிப்போகும் என்று கூறப்பட்டது. ஆனால் சசிகலா தனது அபராதத் தொகையான ரூ.10 கோடியே 10 லட்சத்தை முறைப்படி அவர் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளதால், அவரது விடுதலை தற்போது உறுதியாகியுள்ளது.
ஆனால், மறைமுகமாக அவரது விடுதலையை தள்ளிப் போடும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், டெல்லி சென்று வந்த அம்முக கட்சி நிறுவனர் டிடிவி தினகரன் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஒரு சில நாள்கள் முன்னரே சசிகலா விடுதலையாகலாம் என அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறையில் இருந்து வெளிவரும் சசிகலாவின் பாதுகாப்புக்காக, இரவு 7.30 மணிக்கு விடுதலை செய்யப்படும் வழக்கமான கைதிகளுடன் இல்லாமல் சசிகலா இரவு 9.30 மணிக்கு விடுதலை செய்யப்படுவதாகவும், விடுதலைக்குபிறகு சசிகலா கர்நாடக போலீசார் பாதுகாப்புடன் கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை போலீஸ் வாகனத்தில் அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அத்திப்பள்ளியில் இருந்து சசிகலா எந்த வழியாக சென்னை வருவார் என கேள்வி எழுந்துள்ளது. இதில் தமிழ்நாடு கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னைக்கு வர இரண்டு வழிகள் உள்ளது. ஓசூர் கிருஷ்ணகிரி, ஏலகிரி, ஆம்பூர் வேலூர் வழியாக சென்னை செல்ல வழி உள்ளது. இதை தவிர்த்து அத்திப்பள்ளியில் இருந்து மீண்டும் பெங்களூர் சென்று வொயிட் பீல்ட் வழியா கோலார் சித்தூர் வழியா ராணிப்பேட்டை மாவட்டத்திற்குள் நுழைந்து சென்னை செல்ல மற்றொரு வழி உள்ளது.
இதில் எந்த வழியை சசிகலா தேர்ந்தெடுப்பார் என்பது குறித்து அவர் விடுதலை நெருங்கும் நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சசிகலா ஆம்பூர் வழியாக வருவதாக கூறி அமமுக நிர்வாகி ஒருவர் அவரை வரவேற்பதற்காக அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரை வரவேற்கும் வகையில், ஆம்பூர் மாவட்ட அமமுக சார்பில் ஃப்ளக்ஸ் போர்டுகள் வைக்க வட்டாட்சியரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
எப்படி இருந்தாலும் சசிகலா விடுதலையாகி சென்னைக்கு எந்த வழியில் வந்தாலும், வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க அமமுகவினர் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"