/tamil-ie/media/media_files/uploads/2021/02/vk-sasikala-sarathkumar-radhika-meet.jpg)
சிறையில் இருந்து வெளிவந்து ஒரு மாதம் நெருங்கும் சூழலில் அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார் சசிகலா. அடுத்தடுத்து பிரபலங்கள் அவரை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத் தக்கதாக மாறியிருக்கிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை வாசம் முடித்து ஜனவரி 27-ம் தேதி சசிகலா ரிலீஸ் ஆனார். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்த அதிமுக.வின் பொதுச் செயலாளராக சிறைக்கு சென்ற அவர் திரும்பி வந்தபோது, அந்த ஆட்சியும் முதல்வரும் அவருக்கு சாதகமாக இல்லை. எனினும் தன்னை அதிமுக.வின் பொதுச்செயலாளராக உரிமை கொண்டாடி வருகிறார் சசிகலா,
சிறையில் இருந்து வெளிவந்த அன்றே அதிமுக கொடி கட்டிய காரில் வலம் வந்தவர், ‘விரைவில் தீவிர அரசியலில் குதிப்பேன்’ என்றும் அறிவித்தார். எனினும் சென்னை தி.நகர் இல்லத்தில் கடந்த 3 வாரங்களாக சலனம் இல்லாமல் இருந்தார் சசிகலா.
இன்று (பிப்ரவரி 24) ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அத்துடன், ‘ஜெயலலிதா தொண்டர்கள் ஒருங்கிணைந்து அதிமுக ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.
தொடர்ந்து இதை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் என தன்னை குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார் சசிகலா. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ராதிகா, சினிமா இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், சமூக சேவகர் டிராபிக் ராமசாமி ஆகியோர் அடுத்தடுத்து புதன்கிழமை சசிகலாவை சந்தித்து பேசினர். உடல் நலம் விசாரிக்க சந்தித்ததாக இவர்கள் கூறினாலும், அரசியல் முக்கியத்துவம் இருப்பதாகவும் அந்த சந்திப்புகள் உணர்த்துகின்றன.
தொடர்ந்து அடுத்தடுத்து பாமக.வை தவிர்த்த அதிமுக கூட்டணிப் பிரமுகர்கள் சசிகலாவை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக தலைவர்கள் யாரும் இப்போது சந்திக்கவில்லை. ஆனால் தேர்தல் நெருக்கத்தில், அதிகாரம் கையைவிட்டுச் சென்றபிறகு அமைச்சர்கள் சிலர் இதேபோல அமைதி காப்பார்களா? என்கிற கேள்வியும் அதிமுக வட்டாரத்திற்குள் விவாதிக்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.