Vk Sasikala Tamil News: கடந்த 4 ஆண்டுகளாக சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் வி கே சசிகலா, இந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். நடந்து முடிந்த தமிழக சட்ட மன்ற தேர்தலில் சசிகலா ஃபேக்டர் முக்கிய பங்கு வகிக்கும் என்று பலர் எதிர்பார்த்த நிலையில், தான் அரசியலிலிருந்து ஒதுங்க இருப்பதாகக் கூறி அனைத்திற்கும் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தார். சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளோடு களம் கண்ட அதிமுகவோ போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் படு தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா மீண்டும் களமாட உள்ளார் எனவும், கட்சியைக் கைப்பற்றும் முயற்சிகளைத் தொடங்கிவிட்டார் அரசியல் வட்டாராங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றது. தவிர, அதிமுக தொண்டர்கள் முதல் முன்னாள் எம்பிகள், அமைச்சர்கள் வரை அவரோடு உரையாடும் ஆடியோ நாள்தோறும் வெளியாகி வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், அதிமுக தலைவர்கள் சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் தான் சசிகலா பேசுவதாகவும், கட்சியை அபகரிக்க முயல்வதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரான சி வி சண்முகம், ‘சசிகலா அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும், கட்சியைக் கைப்பற்ற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது போன்ற கருத்துக்களை பத்திரிகையாளர் சந்திப்புகள் மற்றும் கட்சி கூட்டத்தில் சண்முகம் தொடர்ந்து பேசி வருகிறார்.

இதனால், சசிகலாவின் உத்தரவின் பேரில் தனக்கு அறியப்பட்ட மற்றும் அறியப்படாத பல்வேறு பகுதிகளிலிருந்து அச்சுறுத்தல்கள் வரத் தொடங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இது குறித்து விழுப்புரம் மாவட்டம் ரோஷனை போலீசாரிடம் புகார் அளித்தும் உள்ளார்.
எனவே முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் விகே சசிகலா உட்பட 501 பேர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 506 (1), 507, 109 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள விழுப்புரம் மாவட்ட போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“